×

திருவொற்றியூர் மீனவர் குடியிருப்பில் பாதாள சாக்கடை அடைப்பால் மழை நீருடன் கழிவுநீர் தேக்கம்: அகற்ற கோரிக்கை

திருவெற்றியூர்: திருவொற்றியூர் மீனவர் குடியிருப்பில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி வருகிறது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவொற்றியூர் மண்டலம், 14வது வார்டுக்குட்பட்ட திருச்சினாங்குப்பத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேறி தெருவில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், இந்த வழியாக பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நடந்துசெல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மேலும், துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைபெய்து வருவதால் தெருவில் தேங்கி இருக்கும் இந்த கழிவு நீரோடு மழைநீர் கலந்து, குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து பொதுமக்களுக்கு காய்ச்சல், வாந்தி, பேதி போன்ற பல்வேறு பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னைக்கு குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruvottiyur ,Fisherman , Thiruvottiyur Fisherman's Quarters Sewage Stagnation Due to Clogged Underground Sewerage with Rain Water: Request to Remove
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...