×

சென்னை மாநகராட்சியுடன் அயப்பாக்கம் ஊராட்சி இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

ஆவடி: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மாநகராட்சியுடன்  அயப்பாக்கம் ஊராட்சி இணைக்கப்படும் என கிராம சபை கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று கிராம மற்றும் நகர சபை கூட்டங்கள் நடந்தது. அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் துரை வீரமணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

இதில், தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, பட்டா, சாலை வசதி, கால்வாய் மற்றும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அமைச்சரிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுபோல், சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள அயப்பாக்கம் ஊராட்சியை சென்னை மாநகராட்சியோடு இணைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு அமைச்சர், அயப்பாக்கம், அடையாளப்பட்டு, வானகரம் உள்ளிட்ட ஊராட்சிகளை வரும் காலங்களில் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டம் உள்ளது.

அடுத்த தேர்தலுக்குள் இணைக்கப்படும் என கூறினார். இதையடுத்து, கொரோனா காலங்களில் பணியாற்றிய 97 துப்புரவு பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அமைச்சர் விருது வழங்கி கவுரவித்தார். இதைத்தொடர்ந்து அயப்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த அமைச்சர், உபரி கால்வாயை தூர்வாரி கூடுதலாக நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்:
அயப்பாக்கம் ஊராட்சியை விரைவில் சென்னை மாநகராட்சியோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலங்களில் தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 381 நடமாடும் மருத்துவ வாகனங்களும், அதுமட்டுமில்லாமல் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. கடந்த 2 தினங்களாக 10 செமீ மழை பெய்தும் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. மழைநீர் தேங்கிய ஒரு சில பகுதிகளில் மின் மோட்டார் மூலம் மழை நீர் அகற்றப்பட்டு வருகிறது.

வெள்ள பாதிப்பு இல்லாமலே பாதிப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். சென்னை மாநகராட்சி வரலாற்றில் கடந்த ஓராண்டில் 1553 கிமீ தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டு வருகிறது” என்றார். கூட்டத்தில், மதுரவாயல் எம்எல்ஏ காரப்பாக்கம் கணபதி, அயப்பாக்கம் ஊராட்சி தலைவர் துரை வீரமணி, ஒன்றியக்குழு தலைவர் பா.கிரிஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் இரா.வினோத், துணை தலைவர் யுவராஜ், தலைமை ஆசிரியர்கள் சாலமோன், கீதா, வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : Ayyappakkam panchayat ,Chennai Corporation ,Minister ,M. Subramanian , Chennai Municipal Corporation, Ayyappakkam Panchayat, Minister M. Subramanian confirmed
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...