தோள்சீலைப் போராட்டமும், வைக்கம் போராட்டமும் நடத்தப்பட்டது ஏன்?.. வரலாறு தெரியாமல் பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ளவேண்டும்: கி.வீரமணி அறிக்கை

மேற்கத்திய கலாச்சாரத்தால் நாடு கெட்டதா?.. தோள்சீலைப் போராட்டமும், வைக்கம் போராட்டமும் நடத்தப்பட்டது ஏன்?.. வரலாறு தெரியாமல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக ஆளுநர் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில் கூறியதாவது:

தமிழ்நாட்டிற்கு ஆளுநராக டில்லி ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள மேனாள் காவல்துறை அதிகாரியாக இருந்த ஆர்.என்.ரவி , ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டே அனுதினமும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்புச் செயலாளர்போல் செயல்படும் வகையில் பேசி வருகிறார்; ராஜ்பவனை ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துத்துவா- ‘சனாதன காலட்சேப மடமாக’ மாற்றி வருகிறார்!

இதற்கு நாளும் எழும் கண்டனங்கள் பற்றி கவலைப்படாமல், ‘ஏற்றப் பாட்டுக்கு என் பாட்டு எதிர்பாட்டு’ என்பதுபோல், அவர் வரலாற்றுக்குப் புறம்பாகவும் - தான் எடுத்த அரசமைப்புச் சட்ட உறுதிமொழிக்கு எதிராகவும் பேசி வருவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!

தானடித்த மூப்பாகப் பேசும் ஆளுநர் மக்கள் வரிப் பணத்தினை சம்பளமாகப் பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியின் கொள்கைக்கு முரணாக, தானடித்த மூப்பாகவே அனுதினமும் கருத்து தானம் என்ற விஷம தானம் செய்து வருகிறார்! கன்னியாகுமரியில் ஒரு கல்லூரியில் தமிழ்நாட்டோடு குமரி இணைந்த நாள் என்ற சாக்கில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அவர் பேசியிருக்கிறார்!

மேற்கத்திய கலாச்சாரத்தால் நன்மை பெற்றோமா? கெட்டோமா?

பாரதீய ஹிதிகாச சங்கலன் சமிதி சார்பில் ஒரு நிகழ்ச்சியாம்! மேற்படி அமைப்பினை இதற்குமுன் மக்கள் அறிந்துள்ளனரா? அப்படியே அறிந்திருந்தாலும், பாரதீய ஹிதிகாச சங்கலன் சமிதி என்பதற்கும், குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைந்ததற்கும் என்ன சம்பந்தம்? மார்ஷல் நேசமணி, போராட்ட வீரர் மணி போன்றவர்களுக்கும், இந்த அமைப்புக்கும் என்ன சம்பந்தம்? என்பது ஒரு முக்கிய கேள்வியாகும்!

அதில் அவர் என்ன பேசியுள்ளார்?

‘‘மேற்கத்தியர்கள் வந்த பிறகுதான் நம் வரலாறு மாற்றி எழுதப்பட்டது; கலாச்சாரம் தவறாகப் பரப்பப்பட்டது’’ என்று கூறியுள்ளார்!

தோள் சீலைப் போராட்டத்தை அறிவாரா ஆளுநர்?

மேற்கத்தியர்கள் வந்திராவிட்டால்...? திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒரு ஹிந்து ராஜ்ஜியமாகவே நடந்தபோது - இவர் சொல்கிற பாரதீய ஹிதிகாச கலாச்சாரக் காலத்தில், அங்குள்ள கீழ்ஜாதிப் பெண்கள் மார்பகத்தை மறைக்கக் கூடாது என்ற தடை இருந்ததே! அந்தக் கலாச்சாரத்தை மேற்கத்தியர்கள்தான் ஒழித்தார்கள் என்பதற்காக இவர் வருந்துகிறாரா?

மார்த்தாண்ட வர்மன் காலத்தில் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்ற பிரிவினர் எப்படி நடத்தப்பட்டனர் என்பதற்கு ஆவணப்படுத்தப்பட்ட பல நூல்கள் - சான்றாவணங்கள் உள்ளனவே அவற்றை மறுக்க முடியுமா?

தோள் சீலைப் போராட்ட வரலாற்றைப் படிக்க வேண்டாமா? அங்கே புரட்சியாளர் நாராயணகுரு, அய்யா வைகுண்டர், அய்யன்காளி போன்றவர்கள் போராட்டங்களை நடத்தி, புரட்சி செய்தது எந்தக் கலாச்சாரத்திற்கு எதிராக? மேற்கத்தியர்கள் வந்த பிறகுதானே சமத்துவம் - சம வாய்ப்பு வந்தது.

நாஞ்செலி

தோள் சீலைக்கு வரி விதிக்கும் வழக்கம் 19 ஆம் நூற்றாண்டிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஈழவர்கள் அதிகமாக வாழ்ந்த கேரளாவில் திருவிதாங்கூர் திவான், ஈழவப் பெண்கள் மார்பை மறைக்க வரி விதித்தது உண்டா, இல்லையா? திருவிதாங்கூர் அரசு கூறியது யாதெனில் “மார்பை மறைக்க விரும்பும் ஈழவப் பெண்கள், கட்ட வேண்டியது, தோள் சீலை வரி; மறைக்க விரும்பவில்லையென்றால் வரி கிடையாது.”

திருவிதாங்கூர் அரசுக்கு உட்பட்ட பகுதியில் சேர்தலா என்ற இடத்தில் ஒரு சிற்றூரில் 30 வயதுடைய நாஞ்செலி என்பவர் வசித்து வந்தார். அவர் “எனது மானத்தைக் காப்பது எனது உரிமை” என்றார். இந்தக் கொடுமையான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ‘முலைவரிக்காக’ வரி வசூலிக்க வந்தவர்களிடம், தனது மார்பையே அறுத்து இலையில் வைத்துக் கொடுத்து, ‘‘எடுத்துக்கொள்’’ என்று சொல்லி உயிர்விட்டார்.

இவர் வாழ்ந்த பகுதி இன்று ‘‘முலைச்சிபுரம்‘’ என்ற பெயரோடு உள்ளது அங்கு இவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதுதான் ‘‘ஹிந்து கலாச்சாரம்‘’ - அதை ஒழித்ததுதான் மேலைநாட்டுக் கலாச்சாரம் (மனிதநேயம்) என்பதை ஆளுநர் அறிந்துகொள்ள வேண்டும். அறியாமையால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவது ஆளுநருக்கு அழகல்ல!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கத்தில் - நாயும், பன்றியும், கழுதையும் போகும் தெருக்களில், ஆறறிவு படைத்த மனிதன் - அவன் பிறவியினால் கீழ்ஜாதி என்று ஹிந்து மதமும், சாஸ்திரங்களும் கூறிய ஆணைப்படி - ஈழவர்களை கோவில் அருகே உள்ள தெருக்களில் நடமாடவிடாததினால்தானே 1924 இல் - 98 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கே வைக்கத்தில் ‘‘சத்தியாகிரகம்‘’ முளைத்தது என்ற வரலாறு அறிவாரா?

தந்தை பெரியாரின் இந்த வைக்கப் போராட்ட வெற்றியைப் பதிவு செய்து,  தந்தை பெரியார் நூற்றாண்டில், ஜனதா அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டபோது - அவ்விழாவில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உள்பட பங்கேற்றனரே, அந்தக் குறிப்பிட்ட வரலாறு இவர் அறிவாரா?

மேற்கத்திய கலாச்சாரம் வராவிட்டால் உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டு இருக்குமா?

மேற்கத்திய கலாச்சாரம் வராவிட்டால்...? இங்குள்ள ஹிந்து விதவைகள்  அனைவரும் சதி அல்லது உடன்கட்டை ஏற்றப்பட்டனரே, ‘சதி மாதா’ கோவில் வடக்கே இருப்பதுபோல ஆக்கப்பட்டிருப்பார்களே - அந்த வரலாற்றை எதிர்க்கிறாரா, இவர்? தெளிவுபடுத்தட்டும்!

அந்த ஹிந்து இராஜ்ஜியத்தில் குற்ற தண்டனை மனு அடிப்படையில்தானே நடைபெற்றது! வழக்கில் சாட்சி சொல்லக்கூட ஜாதி அடிப்படையில் பார்த்து நீதிமன்றங்களுக்கு வெளியே சாட்சி நிறுத்தப்பட்டு, அதைக் கேட்டு ஒருவன் வந்து நீதிபதியிடம் கூறி, சாட்சியம் பதிவு செய்யப்பட்டதோடு, எந்தெந்த ஜாதி எவ்வளவு இடைவெளியில் நிற்கவேண்டும் என்ற விதி நடைமுறையிலிருந்தும், குற்ற தண்டனைகள் நீதியான அந்த அநீதி ஒழிந்ததும் மேற்கத்திய ஆட்சி வந்த பிறகுதானே!

யூனிபார்ம் கிரிமினல் சட்டம் வந்தது எப்போது?

Uniform Civil Code என்று இன்று கேட்கிறதே ஆர்.எஸ்.எஸ். - அதன் ஆதரவாளிகள், இதற்குமுன் Uniform Criminal Code எல்லா ஜாதியினருக்கும் ஜாதி வேற்றுமை பாராமல் ஒரே வகை தண்டனைச் சட்டம் வந்தது - எப்போது? யாரால்? ஆளுநர் புலம்பும் ஹிந்து ஹிதிகாச தர்ம நெறிப்படி இருந்த தண்டனைச் சட்டம் மாற்றப்பட்டது எப்படி?

1924 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தெருவில் நடக்க ஓராண்டு தொடர் போராட்டம் - ‘‘சத்தியாகிரகம்‘’ நடந்தது. ‘‘ஆதிதிராவிடர் உள்பட அனைவரும் தெருக்களில் நடப்பதில் எந்தத் தடையும் கிடையாது. ஜாதி உணர்ச்சியால் யாராவது தடுத்தால், அது குற்றம்‘’ என்று நீதிக்கட்சி ஆட்சியில் பனகால் அரசர் முதலமைச்சராக இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டதே!  (25.09.1924, அரசாங்க உத்தரவு நெ.2660).

 தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் முயற்சி முக்கியமாக இருந்ததையெல்லாம் ஆளுநர் அறிவாரா?

‘திராவிட மாடல்’ - ஆரிய மாடல் என்பது என்ன?

‘திராவிட மாடல்’ எப்படி? ஆரிய மாடல் எப்படி? என்பதை ஆளுநர் ரவி போன்றவர்கள் புரிந்துகொள்ள இது ஒரு சிறு எடுத்துக்காட்டு! எனவே, அரசின் கடமையில் அக்கறை செலுத்தட்டும் நம் ஆளுநர். இப்படி ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்போலப் பேசி, அவலத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: