மணலி மண்டலத்தில் மழைநீர் பாதிப்பு; 150 குடும்பங்களுக்கு பாய், பெட்ஷீட்: மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ ஆய்வு

திருவொற்றியூர்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வடசென்னையில் பல பகுதிகளில்  3 தினங்களாக மழை பெய்தது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மழைநீர் தேங்கினாலும் அடுத்த 2 மணி நேரத்தில் வடிந்து கால்வாய் வழியாக சென்றுவிடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தபோதிலும் கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

மணலி மண்டலத்தில் 8 வார்டுகளில் வசிக்கும் 5 ஆயிரம் கூலி தொழிலாளர்  குடும்பத்தினருக்கு 3 வேளையும் மாநகராட்சி சார்பில் உணவு வழங்க மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் ஏற்பாடு செய்திருந்தார்.  இந்நிலையில், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் மழைக்கால சிறப்பு அதிகாரி கணேசன், மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் நாராயணன், கவுன்சிலர்கள் காசிநாதன், ராஜேந்திரன், நந்தினி, தீர்த்தி ஆகியோர்  மணலி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

 பின்னர், கொசப்பூர், ஆமுல்லைவாயல் மேம்பால பகுதிக்கு சென்று, புழல் ஏரி உபரிநீர் வரக்கூடிய கால்வாய்களை பார்வையிட்டனர். மணலி புதுநகர் வடிவுடையம்மன் நகரில் கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் செல்வதை பார்வையிட்டனர். கால்வாய்களில் வரும் உபரிநீர் குடியிருப்புக்குள் புகாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு சுதர்சனம் எம்எல்ஏ உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாத்தூர் எம்எம்டிஏவில் உள்ள அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள 150 குடும்பங்களுக்கு மாநகராட்சி சார்பில் பாய், பெட்ஷீட், தலையணை, பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.  ஆய்வின்போது, உதவி ஆணையர் கோவிந்தராஜ், சார் பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் தாமரைச்செல்வன், பாபு உடனிருந்தனர்.

Related Stories: