×

சென்னையில் நிரந்தரமாக மழைநீர் தேங்காதவாறு அரசு நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வை எட்டுவதற்கான வழிமுறைகள் குறித்து மாநகராட்சி மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்றைய தினம் மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றப்பட்ட பகுதிகளில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றப்பட்ட பகுதிகளில், எதிர்காலத்தில் தானாகவே தண்ணீர் வெளியேறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

கடந்த 2021ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது சென்னையில் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவில் மழைநீர் தேங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர், நாள்தோறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார்கள்.  மேலும், சென்னையில் மழை வெள்ளப் பாதிப்புகளிலிருந்து நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற குடிமைப் பணி அதிகாரி திருப்புகழ் தலைமையில் வெள்ள மேலாண்மைக் குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரைகளின்படி மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வெள்ள மேலாண்மைக் குழுவின் பரிந்துரையின்படி, பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் மழைநீர்த்தேக்கம் இல்லை என்றார். மேலும் மழைநீர் அகற்றப்பட்ட இடங்களில் நோய்தொற்று ஏற்படாதவாறு, சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசிகள் தெளிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். வடசென்னை பகுதிகளில் குறுகிய நீர்வழித்தடங்கள் குறித்து பொறியாளர்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.


Tags : Chennai ,Minister ,KN Nehru , Chennai, Rainwater, Government, Minister K.N. Nehru
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...