×

திருவேற்காடு நகராட்சி குடியிருப்புகளில் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்: அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் குடியிருப்புகளுக்கு இடையே தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை காரணமாக, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சுந்தரசோழபுரம், சக்தி நகர், ஏழுமலை நகரில் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து தகவலறிந்ததும் கடந்த 2 நாட்களாக அந்தந்த பகுதிகளில் மின்மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவேற்காடு நகராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அங்குள்ள நகர் பகுதிகளில் முழங்கால் அளவு தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று, அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், வருங்காலத்தில் மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சா.மு.நாசர் உறுதியளித்தார். வேலப்பன்சாவடி அருகே கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த பழமையான தரைப் பாலம் இடித்து அகற்றப்படும் பணியை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி, நகராட்சி ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvekadu ,Minister ,S.M. Nassar , Tiruvekadu Municipal Residence, Rainwater Removal Work Intensity, Minister S.M. Nasser Inspection
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...