×

செங்கல்பட்டு அருகே ஓடும் அரசு பேருந்தில் பெண் மரணம்: செய்வதறியாது திகைத்த கணவருக்கு உதவிய போலீஸ்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நேற்றிரவு நெல்லைக்கு சென்ற அரசு பேருந்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பரிதாபமாக மரணமடைந்தார். செய்வதறியாது திகைத்த அப்பெண்ணின் கணவருக்கு போலீசார் உதவி செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம் (62). இவரது மனைவி செல்வி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இத்தம்பதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னை பம்மல் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள ஓட்டல் மற்றும் மரக்கடையில் வேலை பார்த்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக செல்விக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், அருணாசலமும் செல்வியும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர்.

 இந்நிலையில், நேற்றிரவு திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் அருணாசலமும் செல்வியும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இப்பேருந்து செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சென்றபோது, செல்வி மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அருணாசலத்திடம் கண்டக்டர் கேட்டிருக்கிறார். அவரது மனைவி செல்வி அசைவற்று கிடப்பதை பார்த்து கண்டக்டர் சந்தேகமடைந்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

பரனூர் சுங்கச்சாவடிக்கு அரசு பேருந்து வந்ததும், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செல்வியை பரிசோதித்தனர். அப்போது, ஓடும் பேருந்தில் ஏற்கெனவே செல்வி பரிதாபமாக மரணமடைந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். அங்கு செல்வியின் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும்படி அருணாசலத்திடம் போலீசார் எடுத்து கூறினர்.

 எனினும், மனைவியின் சடலத்தை எடுத்து செல்ல தன்னிடம் பணம் இல்லை என அருணாசலம் அழுதபடி போலீசாரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், ஒரு தனியார் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு, அதற்கான பணத்தையும் கொடுத்து, மனைவியின் சடலத்துடன் அருணாசலத்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க போலீசார் உதவி செய்தனர். போலீசாரின் மனிதாபிமான சேவையை கண்டு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.


Tags : Chengalpattu , Chengalpattu, woman dies in moving government bus, police helps her husband
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்