காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 39 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை  பெய்து வருகிறது. அந்த வகையில் மாவட்டத்துக்கு உட்பட்ட காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 3 நாட்கள் மழை பெய்தது. இதனால், காஞ்சிபுரம் மாதா கோயில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர்,  விளக்கடி பெருமாள் கோயில் தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

மழைநீர் தேக்கத்தால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் காந்தி ரோடு, காமராஜர் வீதி, வள்ளல் பச்சையப்பன் தெரு, இந்திரா காந்திசாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்றைய மழையளவு (மி.மீ):

காஞ்சிபுரம்-21.40, ஸ்ரீபெரும்புதூர்-11.80, உத்திரமேரூர்-30, வாலாஜாபாத்-26.90, செம்பரம்பாக்கம்-13.60, குன்றத்தூர்-28.60 பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்  என  கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

மழையின் காரணமாக  உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம் ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கல், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல் சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி,  கோவிந்தவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி உள்ளிட்ட  29 சிறிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில்  381 ஏரிகள் உள்ளன. இதில், சிறிய ஏரிகளான 29 ஏரிகள் 100 சதவீதமும், 21 ஏரிகள் 76 சதவீதமும், 98 ஏரிகள் 50 சதவீதமும், 181 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன.

குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் பெரிய ஏரிகளான தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் தென்னேரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. உத்திரமேரூர், பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், மணிமங்கலம் ஏரிகள்  வேகமாக நிரம்பி வருகின்றன.  தற்போது தாமல் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 528 ஏரிகள் உள்ளது. இதில், 10 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. 19 ஏரிகள் 80 சதவீதமும், 51 ஏரிகள் 75 சதவீதமும்,  157 ஏரிகள் 50 சதவீதமும், 291 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று தூறல் மழை பெய்தது.  மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம், செங்கல்பட்டு  ஆகிய பகுதிகளில் தேசிய மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். செங்கல்பட்டு கலெக்டர் அலவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மார்க்கெட் பகுதிகளில்  மழைநீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள், உறவினர்கள்  பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் பெரிய ஏரிகளான மதுராந்தகம், பொன்விளைந்தகளத்தூர், பாலூர், கொண்டங்கி,  மானாமதி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி,  மேடவாக்கம், அணைக்கட்டு, செய்யூர் ஆகிய  ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்கும் மதுராந்தகம் பெரிய ஏரி, பொன்விளைந்தகளத்தூர் ஏரி நிரம்பி வருவதால் இந்தாண்டு விவசாயம்  செழிக்கும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: