×

மாநகரில் விபத்துகளை தடுக்க 61 இடத்தில் குவி கண்ணாடி அமைக்க திட்டம்

சேலம்: சேலம் மாநகரில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், கூரான சாலை வளைவு பகுதியில் குவி கண்ணாடி அமைக்கப்படுகிறது இதற்கு 61 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகர், மாவட்ட போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். விதிமுறைகளை மீறிய வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களின் லைசென்சை ரத்து செய்ய போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து வருகின்றனர். சேலம் மாநகர பகுதிகளில் கடந்த ஜூன் மாதம்  முதல் அக்டோபர் மாதம் வரை போக்குவரத்து விதி மீறியதாக இதுவரை 55 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹெல்மெட் அணிபவர்களின் சதவீதம் 60ல் இருந்து 80 ஆக உயர்ந்துள்ளது. வருங்காலங்களில் ஹெல்மெட் அணிபவர்களின்  சதவீதம் மேலும் உயரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.  

மேலும், போதையில் வாகனம் ஓட்டிய 3500 பேர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக  லைசென்ஸ் ரத்து செய்ய அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். மாநகரில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச் சென்று வாலிபர்களே அதிகளவில் விபத்தில் சிக்குகின்றனர். அதுவும் வளைவு சாலைகளில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதில், பலத்த காயமடைந்து ஒரு சிலர் உயிரிழந்து விடுகின்றனர்.

இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கும் மாவட்ட சாலை பாதுகாப்பு கூட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மாநகரில் வளைவு சாலைகளில் விபத்துக்களை தடுக்கும் வகையில், கூரான சாலை வளைவு பகுதிகளில் குவி கண்ணாடி பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனை உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிர்வாகி பாபு என்பவர், இலவசமாக அமைத்து தருவதாகவும்  அதற்கு மாநகராட்சியில் உரிய அனுமதி அளிக்க வேண்டும் என மனு அளித்தார். இதற்கு மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் சூரமங்கலம் மண்டலத்தில் 22 இடங்களில் குவி கண்ணாடியும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 20 இடங்களில் குவி கண்ணாடியும், அம்மாபேட்டை மண்டலத்தில் 19 இடங்களில் குவி கண்ணாடியும் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் கூறும்போது, சேலம் மாநகரில் மழையால் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்.

பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 33 இடங்களில் ஓடை, சாக்கடை கால்வாய்கள் தூர் வாரப்பட்டு வருகிறது. மாநகரில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் 61 இடங்களில் குவி கண்ணாடி பொருத்தப்படுகிறது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.


Tags : To prevent accidents in the city, there is a plan to install reflective glass at 61 places
× RELATED கல்லூரிகளில் வாக்குப்பதிவு...