கிருஷ்ணராயபுரம் பகுதியில் காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்காலுக்கு நிலம் எடுக்கும் பணி துவக்கம்

கிருஷ்ணராயபுரம்:கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணிக்கு அடுத்தகட்டமாக நிலம் எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதால் மீண்டும் பணிகள் விறுவிறுப்பு அடைந்து வருகிறது. நதிநீர் இணைப்பின் முதல்கட்டமாக மாயனூர் காவிரியின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. காவிரியில் வெள்ள காலங்களில் வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சியான மாவட்டங்களில் கொண்டு சென்று விவசாயத்தை செழிக்க செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மத்திய,மாநில அரசு நதி நீர் இணைப்பு திட்டத்தை வகுத்து செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

அதன்படி காவிரி -வைகை- குண்டாறு இணைப்பின் முதல் கட்டமாக காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் தாலுகா மாயனூர் தென்கரை வாய்க்கால் தலைப்பு பகுதியிலிருந்து இந்த வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கி திருக்காம்புலியூர், மேட்டுதிருக்காம்புலியூர் கிராமங்களில் முதல் கட்டமாக 4 கிலோமீட்டர் வரை ரூ.171 கோடி செலவில் வெட்டும் பணி இரவு பகலாக நடந்து வந்தது. பின்னர் கொரோனா தொற்று பிரச்சனை மற்றும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாததால் வாய்க்கால் வெட்டும் பணி சில மாதங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்று மீண்டும் வாய்க்கால் வெட்டும் பணி விறுவிறுப்பாக தொடங்கப்பட்டு நடந்து வந்தது. தற்போது வாய்க்கால் வெட்டும் பணி கிட்டதட்ட 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் முக்கியமாக காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்காலுக்கு தண்ணீர் பிரித்து கொடுக்கும் வகையில் பாலத்துடன் ஷட்டர் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4 கிமீ தூரம் வாய்க்கால் வெட்டும் பணி 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இனி மேட்டுதிருக்காம்புலியூர் சாலையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படாமல் உள்ளது.

அதே போல கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பகுதியில் பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறையிடம் திட்ட மதிப்பீடு கோரப்பட்டுள்ளதாகவும், அதே போல ரயில்வே இருப்பு பாதை கடக்க பாலம் அமைக்க ரயில்வே துறையிடமிருந்து திட்ட மதிப்பீடு கேட்டு கடிதம் அனுப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதே போல தென்கரை வாய்க்காலில் ஷட்டர் அமைக்கும் பணியும் பாக்கி உள்ளது. தற்போது தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் பணிகள் செய்வதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் தண்ணீர் அடைத்த பிறகு அதாவது ஏப்ரல், மே மாதங்களில் இந்த பணிகள் தொடங்கப்படும் என தெரிய வருகிறது.

மேலும் கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதியான பிச்சம்பட்டி, மகாதானபுரம்,மகிளிப்பட்டி, நரசிங்கபுரம் வழியாக வாய்க்கால் வெட்ட நிலஅபகரிப்பு செய்யும் பணி முடிவடைந்துள்ளது. விரைவில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும் என குண்டாறு வாய்க்கால் வெட்டும் பணிக்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். நநிநீர் இணைப்பின் முதல் கட்டமாக மாயனூர் காவிரியில் கதவணை கட்ட வேண்டும்என கடந்த திமுக ஆட்சியி்ன் போது கிருஷ்ணராயபுரம் திமுக எம்எல்ஏவாக இருந்த காமராஜ் சட்டசபையில் வலியுறுத்தி பேசினார். இதனை அடுத்து மாயனூர் கதவணை கட்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி நிதி ஒதுக்கி ஆணை பிறப்பித்தார்.

பின்னர் மாயனூர் பிரமிக்கும் வகையில் 1.05 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து நதி நீர் இணைப்பின் முதல்கட்டமாக தற்போது காவிரி தெற்கு வெள்ளாறு திட்டம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ஆனால் நநி நீர் இணைப்புக்கு அன்றே விதை போட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பது காலத்தால் மறைக்க முடியாத உண்மையாகும்.

Related Stories: