×

தொடர் மரணம் எதிரொலி; புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை: வனத்துறையின் எச்சரிக்கை பலகை கிழிப்பு

பட்டிவீரன்பட்டி: தொடர் மரணம் காரணமாக பெரும்பாறை அருகேயுள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.  
பெரும்பாறை அருகே மஞ்சள்பரப்பு என்ற இடத்திலிருந்து 300 அடி தூரத்தில்  உள்ளது புல்லாவெளி அருவி. இந்த அருவியில் தண்ணீர் விழும் பகுதி 300 அடி பள்ளத்தாக்கு  நிறைந்த ஆபத்தான பகுதியாகும். இந்த அருவி சுற்றிலும் மலைகள் சூழ்ந்து  பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு  மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த அருவி மலைப்பகுதி சுற்றி பசுமையான ஆபத்தான பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது. நீண்ட தூரம் ஆறாக பயணித்து  இந்த இடத்தில் அருவியாக பாய்கின்றது.

இந்நிலையில் அருவியன் நீர்பிடிப்பு பகுதிகளான தாண்டிக்குடி அருகேயுள்ள பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு மற்றும் சுற்றியுள்ள மலைக்கிராமங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக தற்போது புல்லாவெளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவில் கொட்டி வருகின்றது. போதிய பாதை வசதி இல்லாததாலும், பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளதாலும் இந்த அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து பலியாவது தொடர் கதையாகி வருகின்றது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு ராமநாதபுரத்தை சேர்ந்த என்ஜீனியர் தவறி விழுந்து பலியானார்.

கடந்த மாதம் கூலித்தொழிலாளியை கொலை செய்து இந்த அருவியில் தூக்கி போட்டுவிட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்ற காரணத்தினால் வனத்துறை சார்பில் அருவியின் நுழைவு பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்லக்கூடாது என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது இந்த எச்சரிக்கை பலகையினை மர்மநபர்கள் கிழித்து எறிந்துவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: ‘புல்லாவெளி அருவியில் தொடர் மரணங்கள் ஏற்படுவதால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இதனை மர்மநபர்கள் கிழித்து விட்டு சென்றுள்ளர். இந்த இடத்தில் நிரந்தரமாக தரமான போர்டு வைக்க வனத்துறை, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Bullawley Falls , Serial Death Echoes; Ban on going to Bullawley Falls: Forest department's warning board torn down
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.