அம்மங்காவு -பந்தபிளா சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பந்தலூர்:  பந்தலூர் அருகே அம்மங்காவு பந்தபிளா இடையே சாலை அமைக்க வேண்டும என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அம்மன் காவு பகுதி ஏழாம் வார்டு பகுதி  அம்மன்காவு பந்தபிளா, தைத்தல்கடவு, வழியாக குன்றில்கடவு செல்லும் சாலை உள்ளது. இச்சலையின் மூலம் பந்தபிளா, தைத்தல்கடவு, குன்றில் கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிப்போர் தங்களின் அன்றாட தேவைகளுக்கு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை மண்சாலையாக இருப்பதனால் பொதுமக்கள் மழைக்காலங்களில் நடந்து செல்வதற்கு சிரமம் உள்ளது.

இதனால் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இந்த சாலையை சிமெண்ட் சாலை அல்லது தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கலெக்டரின் உத்தரவு அடிப்படையில் அச்சுகுட்டன் வீடு முதல் விஜயகுமார் வீடு, பாலன் வீடு, வழியாக மாப்பிள்ளை ரெட்டை என்கிற பழங்குடியினர்கள் வீடு வரையில் குன்றிலகடவு பாலம் செல்லும் சாலையில் இணைப்பு வரை சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இந்த சாலை சிமெண்ட் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் சாலை பணி மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு இந்த சாலை சிமெண்ட் சாலையாக அமைக்க ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சாலையை போடுவதற்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் சாலை போடுவதற்காக பூஜை போட்டு சென்றார். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் ஒருமுறை இந்த சாலை போட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.  தன்  அடிப்படையில் வேறு ஒப்பந்ததாரர் ஒருவர் மூலம் சாலை பூஜை போடப்பட்டது அதன் பின்னும் சாலை போடுவதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சாலை போட வேண்டும் என பொதுமக்கள் சார்பில்  வலியுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் ஜல்லி கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டது.   மீண்டும் ஒருமுறை சாலை போடுவதற்கான பூஜை போடப்பட்டது.  மூன்று முறை இதுவரை இந்த சாலை அமைக்க பூஜை போடபட்டும் இது நாள் வரை சாலை அமைக்கவில்லை. கற்கள் மட்டும் கொட்டப்பட்டு உள்ளது. இந்த சாலை ஒப்பந்தம் விடப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்தும் மூன்று முறை பூஜை போடப்படும் இதுவரை இந்த சாலை போடப்படாமல் உள்ளதால், இந்த பகுதி மக்கள் மிகவும்  ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இன்னமும் மழைக்காலங்களில் சேறும் சகதியும் உடன் கூடிய வழுக்கிச் செல்லும் சாலையிலேயே நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் மழைக்காலங்களில் விவசாய விளைபொருளான தேயிலை, வாழை உள்ளிட்ட பொருட்களை தலையில் சுமந்து வர மிகவும் சிரமப்படும் சூழல் உள்ளது.

மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், முதியவர்கள் என பலரும் இந்த சாலையில் நடக்க முடியவில்லை.   எனவே சம்பந்தபட்ட துறையினர், மாவட்ட நிர்வாகம், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையை முழுமையாக  சிமெண்ட் சாலையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: