நாங்குநேரியில் 6 செமீ பதிவு: நெல்லை, தூத்துக்குடியில் பலத்த மழை: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

நெல்லை: நெல்லையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நல்ல மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் 2 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்.18ம் தேதி தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக கடந்த வாரம் தான் தொடங்கியது. வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயிகள் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளை தொடங்கினர்.

இந்நிலையில் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்த போதிலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான சாரல் மட்டுமே தலை காட்டியது. இந்நிலையில் நெல்லையில் நேற்று காலை மிதமான வெயில் நிலவிய போதிலும், பிற்பகல் 2.30 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது. மாலை 3 மணிக்கு பிறகு நெல்லை வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட், பாளை. பஸ் ஸ்டாண்ட், சமாதானபுரம், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி விடும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவ, மாணவிகள் பலரும் மழையின் நனைந்து கொண்டே வீடு திரும்பினர்.அணைகளை பொருத்தவரை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 85.45 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 535 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 404 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 97.74 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 71.25 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 61 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை மூடப்பட்டுள்ளது.  வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 13.25 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.49 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 48.50 அடியாகவும் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழையளவை பொருத்தவரை நாங்குநேரியில் அதிகபட்சமாக 60 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணையில் 5 மிமீ, சேர்வலாறில் 1 மிமீ, மணிமுத்தாறில் 7.2 மிமீ, அம்பாசமுத்திரத்தில் 14 மிமீ, சேரன்மகாதேவியில் 3 மிமீ, களக்காட்டில் 1.2 மிமீ, மூலக்கரைப்பட்டியில் 8 மிமீ, பாளையங்கோட்டையில் 4 மிமீ, நெல்லையில் 0.8 மிமீ மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நல்ல மழை பெய்தது. மணியாச்சி, திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், கருங்குளம், வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: