பரவனாறு ஐந்து கண் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து வருவதால் அவதி

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராம பகுதியில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதமாக உள்ள பரவனாறு ஐந்து கண் பாலம் வலுவிழந்து தடுப்பு சுவர் முழுவதும் இடிந்துவிழுந்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராம பகுதியில் சென்னை- கும்பகோணம் தேசிய  நெடுஞ்சாலையை இணைக்கும் விதமாக பரவனாறு ஐந்து கண் பாலம் உள்ளது. நூற்றாண்டை கடந்த இப்பாலத்தின் வழியே தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகளும் கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.

பல மாவட்டங்களை இணைக்கும் விதமாக இந்த பாலம் இருந்து வருகிறது. பாலத்தில் தடுப்பு சுவர் 30 மீட்டர் தூரத்திற்கு இல்லாததால் கடந்த இரண்டாண்டுக்கு முன்பு போர்வெல் லாரி ஒன்று பரவனாற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும் கடந்த வெள்ளத்தின் போது பாலத்தை மூழ்கடித்து சென்ற தண்ணீரில் காருடன் ஒருவர் பரிதாபமாக இறந்தது குறிப்பிடதக்கது.   பரவனாறு ஐந்து கண் பாலம் முழுவதும் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. அதிக எடை கொண்ட ராட்சத இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களை இந்த பாலத்தின் வழியே செல்ல அனுமதிக்ககூடாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த பாலத்தின் நிலையறிந்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், நகாய் திட்ட அதிகாரிகளும் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்காமல் மெத்தன போக்கில் இருந்து வருகின்றனர். எனவே ஏதேனும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: