×

விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் புதிய தாலுகா உருவாக்கம் எப்போது? ஏக்கத்தில் காத்திருக்கும் 50 கிராமங்கள், சான்றிதழுக்கு 30 கி.மீ தூரம் அலைக்கழிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் புதிய தாலுகா  உருவாக்கப்படாததால் அங்கு வசிக்கும் மக்கள், அரசு திட்டங்களுக்கு திண்டிவனத்துக்கும், வானூருக்கும்  சுமார் 30 கி.மீ தூரத்திற்கு அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். பல ஆண்டுகளாக  ஏக்கத்தில் காத்திருக்கும் 50 கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு  நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளனர். தமிழகத்தில்  அரசுநலத்திட்டங்கள் எளிதாக கிடைக்கவும், அடிப்படை வசதிகளை உறுதிபடுத்தவும்  மிகப்பெரிய மாவட்டங்களை இரண்டாகப்பிரித்து ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட துறை  அதிகாரிகள் நியமிக்கப்பட்டுஉள்ளது. இதன் நோக்கம், மிகப்பெரிய மாவட்டத்தில்  மக்களுக்கான அரசுநலத்திட்டங்கள், அவர்களுக்கான கோரிக்கைகளை தீர்ப்பதில்  ஏற்பட்டுள்ள சிக்கல்களை களையும்வகையில் தமிழகஅரசு பொதுமக்களின் நலன்கருதி  இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, மாவட்டங்கள்  பிரிக்கப்பட்டாலும் அதன்பிறகு புதிய வருவாய் கோட்டங்கள், தாலுகாக்கள்  பிரிக்கப்படாமல் இருப்பது சற்றுசங்கடங்களை ஏற்படுத்தியுள்ளதாக  கூறப்படுகிறது. ஆம், பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தாலுகாக்கள்  தற்போது மக்கள்தொகையில் இரண்டு மடங்கு அதிகரித்த போதிலும் பிரிக்கப்படாமல்  இருப்பதால் வருவாய்த்துறை வழங்கும் சான்றிதழ்கள், உதவித்தொகை போன்றவற்றை பெற  கிராமப்புற மக்கள் படும்திண்டாட்டம் குறைந்தபாடில்லை. குறிப்பாக, தமிழகத்தின்  மிகப்பெரிய மாவட்டமான விழுப்புரம் கடந்த 2019ம் ஆண்டு பிரிக்கப்பட்டு  புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது. இதன் மூலம் அதிகாரிகள்  பணிப்பளு குறைந்ததுமட்டுமின்றி பொதுமக்களும் எளிதாக அரசுஅலுவலகங்களில்  தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர்.

இருப்பினும்,  மிகப்பெரிய தாலுகாக்கள், வருவாய்கோட்டங்கள் பிரிக்கப்படாமலிருப்பது  பொதுமக்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்  மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், கண்டாச்சிபுரம்,  திருவெண்ணெய்நல்லூர், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், மேல்மலையனூர் என 9  தாலுகாவும், விழுப்புரம், திண்டிவனம் என 2 வருவாய்கோட்டங்களும் உள்ளன.  அதில் விழுப்புரம் கோட்டத்தில் 5 தாலுகாவும், திண்டிவனத்தில் 4 தாலுகாவும்  உள்ளடக்கியுள்ளது. இதில், மிகப்பெரிய தாலுகாவான திண்டிவனத்தை 2 ஆக  பிரித்து மயிலம் புதிய தாலுகா ஏற்படுத்த வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை  இருந்து வருகிறது. சட்டமன்றத்தொகுதி என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ள மயிலம்  ஒன்றியத்தில் 47 கிராமங்களும், அதில் 1.70 லட்சம் மக்கள் வசித்து  வருகின்றனர்.

இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிட்டா, பட்டா, ஜாதிச்  சான்று, முதியோர் ஓய்வூதியம், வாரிசு சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச்  சான்று உள்ளிட்ட ஆவணங்களைப் பெற மயிலம் ஒன்றியத்தின் தொலைதுார கிராமங்களில்  இருந்து சுமார் 30கி.மீ., துாரம் உள்ள திண்டிவனத்திற்கு செல்ல வேண்டிய  நிலை உள்ளது. பெரும்பாலான கிராமங்களில் இருந்து திண்டிவனத்திற்கு போதிய பஸ்  வசதிகள் இல்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் குறித்த  நேரத்தில் கல்வி தொடர்பான சான்றுகளை பெற முடியாமல் உள்ளனர். மேலும் மயிலம்  பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும்  நலிந்த பிரிவை சேர்ந்தவர்களும், அரசின் நலத்திட்ட உதவிகளை அடைய முடியாமல்,  திண்டிவனத்திற்கு நாள்தோறும் படையெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே  பொதுமக்கள் வசதிக்காக, மயிலம் ஒன்றியத்தில் உள்ள கிராம பகுதிகளையும்  மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள தென்பசியார், கீழ்எடையாளம், தென்களவாய், வைரம்  பேட்டை மற்றும் வானுார் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாக்கம், குன்னம்,  பரிக்கல்பட்டு, ஐவேலி, பொன்னம்பூண்டி, பொம்பூர், சிறுவை, கோரைக்கேணி,  எடையப்பட்டு ஆகிய கிராமங்களைப் பிரித்து தனி தாலுகாவாக உருவாக்க வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மயிலத்தில் பிரசித்திபெற்ற முருகன்கோயில்  மற்றும் தனியார் கல்லூரிகள், தமிழ்நாடுகாவல்துறை பயிற்சி பள்ளி உள்ளிட்ட  முக்கியஇடங்கள் அமைந்துள்ளதால் மயிலம் தனிதாலுகாவாக உருவாக்கப்பட  வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

* முதலமைச்சர் நிறைவேற்றுவார் எம்எல்ஏ நம்பிக்கை இதுகுறித்து மயிலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் கூறுகையில், எனது தொகுதியில்  மயிலம் புதிய தாலுகா ஏற்படுத்தவேண்டுமென்று சட்டசபையில் பேசியுள்ளேன்.  தமிழக முதலமைச்சரிடமும், வருவாய்த்துறை அமைச்சரிடமும் தனிப்பட்டமுறையில்  கோரிக்கை மனு அளித்துள்ளேன். சான்றிதழ் பெற பொதுமக்கள் மயிலத்திலிருந்து திண்டிவனத்திற்கும், வானூருக்கும்  செல்வது மிகக்கடினமாக உள்ளது. பேருந்துவசதிகளும் இல்லை. எனவே மக்களின்நலன்  கருதி உடனடியாக மயிலம் புதிய தாலுகா அமைக்க வேண்டும். தமிழக முதலமைச்சர்  நிச்சயம் நிறைவேற்றிக்கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

* வானூரில் புதிய வருவாய் கோட்டம் ஏற்படுத்தப்படுமா?
விழுப்புரம்  மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் என 2 வருவாய்கோட்டங்கள் உள்ளது.  விழுப்புரம் கோட்டத்தில் ஏற்கனவே 3 தாலுகாமட்டுமே இருந்த நிலையில் புதிதாக  உருவாக்கப்பட்ட கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் ஏற்கனவே உள்ள  விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் என மொத்தம் 5 தாலுகாவை உள்ளடக்கியுள்ளது.  அதேபோல், திண்டிவனத்தில் மேல்மலையனூர், செஞ்சி, மரக்காணம் ஆகிய 4 தாலுகாவை  கொண்டுள்ளது. அதிகபட்சம் 3 தாலுகாவைக்கொண்ட வருவாய்கோட்டங்கள்  இருந்துவரும்நிலையில் 5 தாலுகாவை கொண்ட கோட்டமாக விழுப்புரம் உள்ளது.  இதனால் நிர்வாகப்பணிகளை சரியாக மேற்கொள்ள முடியாமல்,  பழங்குடியினருக்கு சான்றிதழ் வழங்க முடியாமல் வருவாய் கோட்ட அதிகாரிகள்  திண்டாடிவருகின்றனர். எனவே, மயிலம் புதிய தாலுகா உருவாக்கப்படும் பட்சத்தில்  விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி, வானூர் ஆகிய தாலுகாவை பிரித்து  வானூரில் புதிய வருவாய்கோட்ட அலுவலகத்தை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை  உள்ளது.

Tags : Thaluka ,Mayelam ,Viluppuram district , When will Mylam new taluk be formed in Villupuram district? 50 villages waiting longingly, 30 km wave for certificate
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...