தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற குடியரசுத் தலைவரிடம் மனு: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் திமுகவுக்கு ஆதரவு

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கும் திமுகவின் அழைப்புக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநரை திரும்பப்பெற கோரும் மனுவில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கையெப்பம் இட வேண்டும் என்கிற திமுகவின் அழைப்பிற்கு தான் ஆதரவு அளிப்பதாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னதாக திமுக எம்.பி.க்கள் மற்றும் ஒருமித்த கருத்து கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் 3ம் தேதிக்கு முன்பு அறிவாலயத்துக்கு வந்து ஆளுநரை திரும்ப பெற கோரும் மனுவில் கையெழுத்திட வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை வெளிப்படுத்தும் வகையில் பேசியதாகவும் புகார் எழுந்தது. மேலும் திருக்குறளில் ஆன்மிகம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் பேசியிருந்தார். இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Related Stories: