தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து மதுரையில் உலகத் தரத்தில் புதிய நவீன மருந்து ஆய்வகம்

* தொடர் ஆய்வுகள் மூலம் மருந்தின் தரம் கண்காணிப்பு

* சட்ட விரோத போதை பொருட்கள் விற்பனை தடுப்பு

மதுரை: தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து மதுரையில் உலகத்தரத்தில் நவீன மருந்து ஆய்வகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தென் மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மருந்துகளின் தரம் பற்றி அறிவதற்காக முதலில் சென்னை ஆய்வகம் சென்று வர வேண்டும். இதனால் காலவிரயம், நடவடிக்கையில் தாமதம் உள்ளிட்டவை ஏற்பட்டது. இதனை தவிர்க்க மதுரை கீழக்குயில்குடியில் மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் நாட்டிலேயே சிறந்ததாக ரூ.20 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த நவீன மருந்து ஆய்வகம் கடந்த ஆக்ஸ்ட் மாதம் துவங்கப்பட்டது.

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். ரூ.1.8 கோடியில் அலுவலக கட்டிடம், ரூ.10.8 கோடியில் நவீன ஆய்வக கட்டிடம், ரூ.6.6 கோடியில் உலகத் தரத்திலான ஆய்வக உபகரணங்கள் என கீழக்குயில்குடியில் புதிய மருந்து ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருந்தின் தரம் குறித்து பொதுமக்களுக்கு உறுதி செய்யப்படுகிறது. தென்மாவட்டங்கள் மற்றும் மதுரையில் உள்ள சுமார் 58 மருந்து நிறுவனங்களின் மருந்துகள் தரம் கண்காணிக்கப்படுகிறது. மருந்து கடைகளிலும் ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது.

 தற்போது மருந்து தரக் கட்டுப்பாடு இயக்குநர் அலுவலகங்கள் உள்பட 3 அலுவலகங்கள் இங்கு செயல்பட்டு வருகிறது. மதுரை ஷெனாய் நகரில் வடக்கு, தெற்கு மண்டல மருந்து தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலகங்கள், புலனாய்வு மற்றும் நடமாடும் குழுவும் செயல்பட்டது. அவை, தற்போது கீழக்குயில்குடி புதிய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு கடந்த 2 மாதமாக இயங்கி வருகின்றன. தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன் மூலம் நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு ஒவ்வொன்றாக பொருத்தும் பணி நடைபெறுகிறது. இந்த புதிய ஆய்வகம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

உலகத் தரத்திலான ஆய்வு

இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது: பிற துறைகளை விட உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதும், ஆண்டுதோறும் அபார வளர்ச்சி அடைவதும் மருந்தியல் துறை தான். தரமில்லாத மருந்துகளை அதிக விலை கொடுத்தும் வாங்கும் நோயாளிகளுக்கு நோய் பாதிப்பு நீடித்து உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.

தரம் குறைந்த மருந்துகளை விற்பனை செய்வதன் மூலம் பொதுமக்களின் உயிருடன் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் விளையாடுகின்றன. நோய் முற்றுவது, மருந்தின் பக்கவிளைவு ஆகியவை மருத்துவர்கள் மீதான நோயாளிகளின் நம்பிக்கையை குழைத்து விடுகிறது. மருந்தின் தரம், மருந்து உற்பத்தி நிறுவனங்களின் முறைகேடுகள் பற்றி பொதுமக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

மருத்துவ துறையில் புழங்கும் பெரும்பணம், குற்றங்களை கண்டும் காணாமல் செய்து விடுகிறது. பெரியவர்களுக்கே இந்த நிலை என்றால் குழந்தைகளுக்கு இதுபோன்ற போலி மருந்துகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதைதொடர்ந்து அரசு, தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் என மருந்துகள் புழங்கும் அனைத்து இடங்களிலும் தொடர்ச்சியாக ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்து மருந்துகள் சேகரித்து ஆய்வகத்தில் தரம் குறித்து பரிசோதிக்கப்படுகிறது. தற்போது உலகத் தரத்திலான நாட்டிலேயே சிறந்த இந்த புதிய ஆய்வகம் மூலம் மருந்துகளின் தரம் பற்றி பரிசோதிக்கப்பட்டு காலதாமதம் இன்றி உடனுக்குடன் முடிவுகள் வௌியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சட்ட விதிமுறைகளை மீறும் மருந்துக் கடைகளின் உரிமம் ரத்து

அரசு அதிகாரிகள் கூறியதாவது: நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லாத மருந்துகள் மற்றும் போலி மருந்து, மாத்திரைகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட மருந்துக் கடைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற மருந்துகள் விற்பனை. மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்குவது, மருந்து உற்பத்தி தேதி குறிப்பிடாமலும், விற்பனை ரசீது இல்லாமலும் மருந்து விற்பது, போதை அல்லது தொடர்ச்சியாக பயன்படுத்த உந்தும் மருந்துகளை விற்பது என சட்டவிதிகளை மீறும் மருந்துக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மருந்துகள் தொடர்பான தவறான விளம்பரங்கள் செய்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதும், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் மருந்து பொருட்கள் விற்பனையும் தடுக்கப்படுகிறது. சமீபத்தில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருந்துக் கடையில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். tndcad@gmail.com இணையதள முகவரியில் மருந்து தொடர்பான கேள்விகள் மற்றும் புகார்கள் குறித்து தெரிவிக்கலாம். புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

Related Stories: