டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கு!: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

டெல்லி: லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.  செங்கோட்டை தாக்குதல் வழக்கில் ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதியானது. 2000ம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் பழமை வாய்ந்த செங்கோட்டை மீது பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரிஃப். செங்கோட்டையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் முகமது ஆரிஃப் என்கிற அஷ்பக் உள்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவர்களில் முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2005ம் ஆண்டு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை 2007ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து ஆரிஃப் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த மனு 2011ல் தள்ளுபடியானது. பின்னர், தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து முகமது ஆரிஃப் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி முகமது ஆரிஃப் தாக்கல் செய்த சீராய்வு மனு தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: