×

ராஜபாளையம் பகுதியில் மேய்ச்சல் நிலம் இல்லாமல் கால்நடை வளர்ப்போர் அவதி

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மேய்ச்சல் நிலமில்லாமல் கால்நடை வளர்ப்போர் அவதியடைந்து வருகின்றனர். ராஜபாளையம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் சஞ்சீவி மலையை அடுத்துள்ள பகுதியகள் விவசாயம் நடைபெறாத இடங்களாக உள்ளன. இப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களை நம்பி பலரும் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதற்கிடையே தற்போது கால்நடைகளுக்கு போதிய மேய்ச்சல் நிலம் இல்லாமல் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் சிலர் கூறும்போது, ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக இப்பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போனது. இதற்கிடையே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அங்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை. இதனால் பல ஆண்டுகளாக கால்நடை வளர்ப்போர் மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கக்கோரி அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் பயனற்ற நிலையில் இருந்து வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வந்த அரசு புறம்போக்கு நிலங்களில் கால்நடைகளை வளர்த்து வந்தோம்.

ஆனால் அவற்றில் நீதிமன்ற வளாகம் மற்றும் அரசு கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் கால்நடை வளர்ப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : Rajapalayam , Cattle breeders in Rajapalayam area suffer without grazing land
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!