×

பெட்டாசியம், பாஸ்பேட் உரத்துக்கு ₹51,875 கோடி : மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி : பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ரூ.51,875 கோடி மானியம் அளிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் சல்பர் போன்ற பயிர் ஊட்டச்சத்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற உரத்துறை பரிந்துரை செய்தது.

அதை ஏற்று 2022-23ம் ஆண்டுக்கு  (அக்டோபர் 1, 2022  முதல் மார்ச் 31, 2023ம் ஆண்டு வரை)  பாஸ்பேட், பொட்டாசியம்   உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையில் மானிய விலைகளை நிர்ணயிக்க பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, நைட்ரஜனுக்கு கிலோவுக்கு ரூ.98.02, பாஸ்பரசுக்கு ரூ.66.93, பொட்டாசுக்கு ரூ.23.65, சல்பருக்கு ரூ.6.12  மானியமாக வழங்கப்படும். இதன் மூலம், இக்காலக்கட்டத்தில் மொத்தம் ரூ.51,875 கோடி அளவிற்கு  மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எத்தனால் விலை அதிகரிப்பு

நடப்பு ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல்  அடுத்த ஆண்டு அக்டோபர் வரையில், கரும்புகளை அடிப்படையாக கொண்ட மூலப்  பொருட்களில் இருந்து பெறப்படும் எத்தனாலுக்கான அதிகபட்ச விலைக்கும்  ஒன்றிய  அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ஒன்றிய அமைச்சர்  ஹர்தீப் சிங் புரி கூறுகையில், ‘‘கரும்பு சாறு, சர்க்கரை பாகு மூலம்  தயாரிக்கப்படும் எத்தனால் லிட்டருக்கு ரூ.63.45ல் இருந்து ரூ.65.61 ஆக  அதிகரிக்கப்பட்டுள்ளது.

பி வகை எத்தனால் ரூ.59.08ல் இருந்து ரூ.60.73  ஆகவும், சி வகையிலான எத்தனால் லிட்டருக்கு ரூ.46.66ல் இருந்து ரூ.49.41  ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்படம் செய்வதற்கான வழிமுறை கடந்தாண்டு வெளியிடப்பட்டது. தற்போது, பெட்ரோலில்  10 சதவீத எத்தனால் கலக்கப்படுகிறது.   வரும் 2025ம்  ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்க, இலக்கு   நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,’’ என்றார்.

Tags : Union Cabinet , Betasium, phosphate fertilizer, Subsidy
× RELATED குவைத் மாங்காஃப் பகுதியில் ஏற்பட்ட தீ...