டிவிட்டரில் தமிழக அரசு குறித்து அவதூறு பதிவு பா.ஜ. ஐடி பிரிவு தலைவரிடம் 2 மணி நேரம் விசாரணை: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி

சென்னை: தமிழக அரசு குறித்து டிவிட்டரில் அவதூறாக பதிவு செய்ததாக பாஜ ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். பாஜ மாநில ஐடி பிரிவு தலைவர் நிர்மல்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வருகை குறித்தும், அதற்கு தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யவில்லை என்று பதிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் பாஜ ஐடி பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார் மீது அவதூறு பரப்புவதாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தனது பதிவு குறித்து விளக்கம் அளிக்க கோரி நிர்மல்குமாருக்கு சைபர் க்ரைம் போலீசார் நேற்று நேரில் வந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தனர்.

சைபர் க்ரைம் சம்மனை தொடர்ந்து பாஜ ஐடி பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சைபர் க்ரைம் போலீசார் மீது நேற்று காலை 11.30 மணிக்கு நேரில் ஆஜரானார். அப்போது டிவிட்டரில் தமிழக அரசு குறித்தும், பிரதமர் பாதுகாப்பு தொடர்பாக எந்த ஆதாரங்களில் அடிப்படையில் பதிவு செய்தீர்கள் உள்ளிட்ட கேள்விகள் சைபர் க்ரைம் போலீசார் கேட்டனர்.

அதற்கு நிர்மல் குமார் அளித்த பதிலை சைபர் க்ரைம் போலீசார் பதிவு செய்து கொண்டனர். 2 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு நிர்மல் குமார் மதியம் 1.30 மணிக்கு வெளியே வந்தார். அப்போது, சைபர் க்ரைம் போலீசார் தேவைப்பட்டால் மீண்டும் வழக்கு தொடர்பாக அழைத்தால் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: