பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தமிழகத்தில் 5,093 முகாம்கள் தயார்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: வடகிழக்கு பருவ மழை ஒட்டி தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைக்க, தமிழகம் முழுவதும் 5,093 முகாம்கள் தயார்  நிலையில் இருக்கிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  தெரிவித்தார். இதுகுறித்து சென்னை, எழிலகத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:

வடகிழக்கு  பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 5,093  முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கிறோம். மாவட்ட நிர்வாகங்கள் எந்த  பகுதிகளில் மக்களை தங்க வைக்கலாம் என ஏற்கனவே முடிவு செய்து  வைத்திருக்கிறார்கள். அதனடிப்படையில், 5,093 முகாம்களில் மக்களை தங்க வைக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது, முகாம்கள் அனைத்தும் காலியாக உள்ளது.

சென்னையில்  மட்டும்  4 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு கேட்கும் நபர்களுக்கு உணவு கொடுக்க  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். உயிர் சேதம் இரண்டு ஏற்பட்டுள்ளது.  அவர்களுக்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு  உத்தரவிட்டுள்ளோம். எங்கேயும் மின் தடை இல்லை.  பணிகள் துரிதமாக நடைபெற்று கொண்டு  இருக்கிறது.

தமிழ்நாடு முழுக்க 138 பேர் தொடர்பு கொண்டுள்ளனர். அதில் 68  பேருக்கு பதில் அளித்துள்ளோம். மீதமுள்ள 70 பேரை சம்மந்தப்பட்ட அதிகாரிகளை  தொடர்பு கொள்ள சொல்லி இருக்கிறோம். பெரிய பாதிப்பு பெரும்பாலான  மாவட்டங்களில் இல்லை. சென்னையில் மட்டும் தான் தண்ணீர் தேங்கும் பிரச்னை  இருக்கிறது. அதை சரி செய்து வருகிறோம்.  முதல்வரின் நேரடி கண்காணிப்பில்  சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு பேசினார்.

Related Stories: