ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 26 இடங்களில் அனுமதி: ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 26 இடங்களில் அனுமதி அளித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 6ம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த உத்தரவிட்டதுடன் அதற்கான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.  ஆனால், அனுமதி வழங்கவில்லை என்று காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், ‘‘கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்திலும் வழங்கவில்லை்’’ என்று வாதிட்டார். இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன் என்.எல்.ராஜா ஆஜராகினர். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, மற்ற இடங்களில் ஏன் வழங்கவில்லை என்று காவல்துறை தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார்.

அதற்கு காவல்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகினர். அப்போது, என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, ‘‘ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களில் அனுமதி வேண்டுமென செப்டம்பர் 30ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 24 இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, மழை எச்சரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அனுமதி வழங்கவில்லை.

அனுமதி வழங்கினால் அதற்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்போது, பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளது.  விசிக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் பொதுக்கூட்டம், மனித சங்கிலிக்கு அனுமதி கேட்டதாலேயே அனுமதிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கேட்பது பேரணிக்கான அனுமதி என்பதால் வழங்க முடியாது என தெரிவித்தார். உள்ளரங்கு கூட்டம் என்றால் அனுமதி வழங்குவதில் பிரச்னை இல்லை.

ஆர்.எஸ்.எஸ். தரப்பு மாநிலத்தின் பாதுக்காப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று வாதிட்டு அனுமதி வழங்கப்பட்டதற்கான உத்தரவுகள், மறுக்கப்பட்டதற்கான உத்தரவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அப்போது நீதிபதி, கோவையை தவிர மற்ற இடங்களில் அனுமதிக்கு பரிசீலிக்கலாமே என்று கேட்டார்.அதற்கு காவல்துறை தரப்பு வழக்கறிஞர், மக்களின் பாதுகாப்பே முக்கியம். தங்களது உயிரை துச்சமென நினைத்தும், நேரத்தையும் தியாகம் செய்தும் தகவல்களை சேகரிக்கும் உளவுத்துறையினர் தரும் தகவல்களை எப்படி யூகம் அல்லது அனுமானம் என்று சொல்ல முடியும்.

அதன்பின்னர் உளவுத்துறையின் அறிக்கையையும் நீதிமன்றத்தில் அவர் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்தார். இதற்கு ஆர்.எஸ்.எஸ். தரப்பு வழக்கறிஞர்கள், உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது. பேரணிக்குதான் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உளவுத்துறை அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி விசாரணையை வரும் நாளைக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: