×

தமிழகத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற குடியரசு தலைவரிடம் முறையிட முடிவு: கூட்டணி கட்சி எம்பிகளுக்கு திமுக அழைப்பு

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து உள்ளது. அவரை திரும்பப் பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.   தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்றது முதல் தொடர்ந்து ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில் இங்கு குழப்பம் ஏற்படுத்தவே இவ்வாறு அவர் பேசி வருவதாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, ெகாமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழக கவர்னரை கண்டித்து கூட்டாக அறிக்கை விடுத்திருந்தனர்.

 இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக பேசி வரும் கவர்னர் ஆர்.என்.ரவி அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு அவரது கூறலாம் என்றும் அவர்கள் கூட்டாக குற்றம்சாட்டியிருந்தனர். இந்த சூழ்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் முன் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து உள்ளது. கவர்னரை திரும்பப் பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிகளுக்கு அதன் பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில் டி.ஆர்.பாலு கூறியிருப்பதாவது:    கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி  ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது.

திமுக  எம்பிக்கள் மற்றும்  திமுகவுடன் ஒருமித்த கருத்து கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் எம்பிக்கள் அனைவரும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து இந்த குறிப்பானையில் கையெழுத்திட அழைக்கிறோம். 3ம் தேதிக்கு முன்பு அறிவாலயத்துக்கு வந்து அந்த  மனுவை படித்து பார்த்து கையெழுத்திட கேட்டுக்கொள்கிறோம். அதை குடியரசுத் தலைவரிடம் கொடுக்க உள்ளோம். கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : the President ,Governor ,RN ,Ravi ,Tamil Nadu ,DMK , Governor RN Ravi, President, appeal decision, alliance MP, DMK call
× RELATED சுயமரியாதை இருக்குமானால் ஆர்.என்.ரவி...