×

ஜிம்பாப்வே கனவு கலைந்தது

அடிலெய்டு: நெதர்லாந்துக்கு எதிராக நடந்த சூப்பர் 12 சுற்று 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற ஜிம்பாப்வே அணியின் அரையிறுதி  கனவு கலைந்தது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானதால் ஒரு புள்ளி,  பாகிஸ்தானை வீழ்த்தியதால் 2 புள்ளி என 2வது பிரிவு புள்ளிப் பட்டியலில் 3 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பில் இருந்தது ஜிம்பாப்வே. வங்கதேசத்திடம் தோற்றிருந்தாலும், நெதர்லாந்தை வீழ்த்தினால் அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற முனைப்புடன் டாஸ் வென்று பேட் செய்த அந்த அணி 19.2 ஓவரில் 117 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

சிக்கந்தர் ராஸா 40 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ஷான் வில்லியம்ஸ் 28 ரன் (23 பந்து, 3 பவுண்டரி) விளாச, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். உதிரி வகையில் 14 ரன் கிடைத்தது.அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து  18 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.  அந்த அணியின் மேக்ஸ் ஓ தாவுத் 52 ரன் (47 பந்து, 8 பவுண்டரி,1 சிக்சர்),  டாம் கூப்பர் 32 ரன் (29 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்டு, முசரபானி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இந்த வெற்றி நெதர்லாந்துக்கு  ஆறுதலாக அமைந்த நிலையில், ஜிம்பாப்வேயின் அரையிறுதி வாய்ப்பு கை நழுவியது என்றே சொல்ல வேண்டும். நவ. 6ம் தேதி தங்கள் கடைசி சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி இந்தியாவையும்,  நெதர்லாந்து அணி  தென் ஆப்ரிக்காவையும் எதிர்கொள்கின்றன.

Tags : The Zimbabwe dream was shattered
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...