×

ராகுல், கோஹ்லி அரை சதம் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா த்ரில் வெற்றி: லிட்டன் தாஸ் அதிரடி வீண்

அடிலெய்டு: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியுடன் மோதிய இந்தியா கடுமையாகப் போராடி 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. ராகுல், கேப்டன் ரோகித் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 2 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, ராகுலுடன் சூப்பர் பார்மில் உள்ள கோஹ்லி இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி 2வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தது.

ராகுல் 50 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஷாகிப் பந்துவீச்சில் முஸ்டாபிசுர் வசம் பிடிபட்டார். அடுத்து கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த சூரியகுமார் 16 பந்தில் 30 ரன் விளாசி (4 பவுண்டரி) ஷாகிப் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 5 ரன், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல் தலா 7 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், கோஹ்லி 37 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. கோஹ்லி 64 ரன் (44 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), அஷ்வின் 13 ரன்னுடன் (6 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் ஹசன் மகமூத் 3, ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. ஷான்டோ, லிட்டன் தாஸ் இருவரும் துரத்தலை தொடங்கினர். ஷான்டோ பொறுமையாக கம்பெனி கொடுக்க, தாஸ் அதிரடியாக விளையாடி வங்கதேச அணிக்கு நம்பிக்கை அளித்தார். அவர் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு மிரட்ட, இந்திய வீரர்கள் செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றனர். வங்கதேசம் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன் எடுத்திருந்தபோது, மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

அந்த நிலையில் டி/எல் விதிப்படி வங்கதேசம் 17 ரன் முன்னிலையில் இருந்ததால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோய்விடுமோ என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். மழை நின்று மீண்டு ஆட்டம் தொடங்கியபோது, வங்கதேசம் 16 ஓவரில் 151 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அஷ்வின் வீசிய 8வது ஓவரின் 2வது பந்தில் லிட்டன் தாஸ் (60 ரன், 27 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ராகுலின் துல்லியமான த்ரோவில் ரன் அவுட்டாக, ஆட்டத்தின் போக்கு அடியோடு மாறியது.

ஷான்டோ 21, அபிப் உசேன் 3, ஷாகிப் 13 ரன்,  யாசிர் அலி 1, மொசாடெக் 6 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, வங்கதேசம் 12.5 ரன்னில் 6 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆனாலும், கடைசி கட்டத்தில் நூருல் ஹசன் - டஸ்கின் அகமது ஜோடி மனம் தளராமல் போராட ஆட்டம் விறுவிறுப்பானது. அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் 20 ரன் தேவைப்பட்ட நிலையில், வங்கதேசம் 14 ரன் மட்டுமே எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

நூருல் ஹசன் 25 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), டஸ்கின் 12 ரன்னுடன் (7 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஹர்திக் தலா 2, ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர். கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியால் இந்தியா 6 புள்ளிகளுடன் 2வது பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியதுடன், அரையிறுதி வாய்ப்பையும் பிரகாசமாக்கிக் கொண்டது.


Tags : Rahul ,Kohli ,India ,Bangladesh ,Liton Das' , Rahul, Kohli, half century, India Thrill win, Liton Das, action wasted
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...