டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது மும்பை தொழிலதிபருடன் ஹன்சிகா காதல் திருமணம்

 மும்பை:  பிரபல நடிகை ஹன்சிகா, மும்பை தொழிலதிபர் காதல் திருமணம், வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெறுகிறது. கடந்த 2003ல் இந்தியில் வெளியான ‘ஹவா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், ஹன்சிகா மோத்வானி. அவர் ஹீரோயினான பிறகு இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார். கடந்த 2011ல் ‘மாப்பிள்ளை’ என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான ஹன்சிகாவுக்கு, சிம்புவுடன் இணைந்து நடித்திருந்த ‘மஹா’ படம் அவரது 50வது படமாக அமைந்தது.

இந்நிலையில், தனது நண்பரும், மும்பை தொழிலதிபருமான சோஹைல் கதுரியா என்பவரை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர்கள் திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அழைக்கப்படுகின்றனர். கடந்த 2020ல் ஹன்சிகாவும், சோஹைல் கதுரியாவும் இணைந்து மும்பையில் புதிய தொழில் ஒன்று தொடங்கினர்.

அது லாபகரமாக இருப்பதால், சோஹைல் கதுரியாவை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாக அவரது தரப்பில் கூறப்படுகிறது. தனது காதலன் சோஹைல் கதுரியாவுடன் பாரிஸ் ஈபிள் டவர் அருகில் எடுத்த போட்டோக்களை நேற்று தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, தங்கள் திருமணத்ைத உறுதி செய்துள்ளார் ஹன்சிகா. அந்த போட்டோக்களில் ஹன்சிகாவுக்கு சோஹைல் கதுரியா தனது காதலை புரபோஸ் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திரையுலகில் நடிகர், நடிகைகள் தங்களுடைய காதலை மறைப்பதும் அல்லது மீடியாவில் வெளியான பிறகு அதை மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தனக்கும், கவுதம் கார்த்திக்கிற்கும் காதல் இல்லை என்று சொன்ன  மஞ்சிமா மோகன், தற்போது அவருடனான காதலை உறுதி செய்திருப்பதுடன், அடுத்த மாதம் தங்கள் திருமணம் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.

அதுபோல், கடந்த மாதம் ராஜஸ்தானில் ஹன்சிகாவின் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும், திருமணம் நடக்கும் இடத்தை அவரது தாயார் டாக்டர் மோனா பெயரில் பதிவு செய்திருப்பதாகவும் வெளியான தகவலை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில், தனது திருமணம் குறித்த அறிவிப்பை போட்டோக்களுடன் மீடியாவுக்கு அனுப்பி வைத்துள்ள ஹன்சிகா, திருமண தேதியையும், நடக்கும் இடத்தையும் கூறியுள்ளார். ஹனிமூன் எங்கே செல்கிறார் என்பது பற்றி சொல்லவில்லை. திருமணத்துக்குப் பிறகு அவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார்.  

Related Stories: