×

ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை வாபஸ் பெறும் மையம்: நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பப் பெறும் மையங்களை அமைத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்க தடை விதித்ததுடன், தண்ணீர் பாட்டில்களை சேகரிக்கும் மையங்களை அமைக்கவும் உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்க மையம் அமைத்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் அதை அமல்படுத்தவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் அமைக்க இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த மையங்கள் அமைப்பதற்கான நடைமுறைகள் 15 நாட்களில் முடிக்கப்படும்  என்றார்.

அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி, அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன என்று கூறி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படவில்லை என்பதை நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்களை அமைப்பது தொடர்பாக 10 நாட்களில் ஆய்வு கூட்டம் நடத்தி சேகரிப்பு மையங்கள் அமைப்பது குறித்து இரு மாவட்ட கலெக்டர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Tags : Ooty ,Kodaikanal ,Nilgiris ,Dindigul , Ooty, Kodaikanal, Plastic Bottle, Recall Centre, Collector, High Court, Order
× RELATED ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்