×

சட்டப்படி எடுத்துக்கொண்ட பதவி பிரமாணத்தை கவர்னர் ஆர்.என்.ரவி மீறி விட்டார்: திமுக கடிதத்தில் கையெழுத்திட்ட பின் வைகோ பேட்டி

சென்னை: அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்ட பதவி பிரமாணத்தை கவர்னர் ஆர்.என்.ரவி மீறி விட்டார் என்று திமுக கடிதத்தில் கையெழுத்திட்ட பின்னர் வைகோ கூறினார். கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் பெறக் கோரி, குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக கூட்டணி முடிவு செய்துள்ளது. இந்த கடிதத்தில் கையெழுத்திட வருமாறு கூட்டணி கட்சிகளுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பொருளாளரும் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார். இதை தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளரும், எம்பியுமான வைகோ நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார்.

இதையடுத்து, மனுவை படித்து பார்த்து அதில் கையெழுத்திட்டார். பின்னர் அளித்த பேட்டி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், தமிழக சட்டப் பேரவை செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதிலேயே கவனம் செலுத்துகிறார். கூட்டுறவு சட்ட திருத்தம், நீட் உள்ளிட்ட 20 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் திருப்பி அனுப்புகிறார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் மாண்புகளையும், உணர்வுகளையும் புண்படுத்துகிறார். அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக பேசி இந்தியா மதம் சார்ந்த நாடு தான் என்று பேசுகிறார். அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டிய ஒருவர், அதன்படி நடக்க வேண்டிய ஒருவர், அப்படி செய்யாமல் சனாதனதர்மம் பற்றி பேசுகிறார். மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறார்.

திருக்குறளை விமர்ச்சிக்கிறார். திராவிட கலாச்சாரம் மற்றும் தமிழர் பெருமைகளை கொச்சைப்படுத்துவதில் தீவிரமாக செயல்படுகிறார். நடுநிலைமை தவறி, அரசியல் சார்ந்த அதுவும் பாஜ அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசி அரசியல் சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறார். அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்ட பதவி பிரமாணத்தை கவர்னர் ஆர்.என்.ரவி மீறிவிட்டார். எனவே அவரை கவர்னர் பதவியில் இருந்து நீக்கக் கோரி அனைத்து கட்சி எம்பிக்கள் சார்பாக மனு அளிக்கப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Governor ,R.R. N.N. Ravi ,Vigo ,Djagar , By law, post, governor, DMK letter, Vaiko interview
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...