×

15 வயது சிறுமிக்கு திருமணம் செய்த விவகாரம் வழக்கை ரத்து செய்ய கோரி சிதம்பரம் தீட்சிதர்கள் மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: பதினைந்து வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி தீட்சிதர்கள் தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.  கடந்த 2021ல் சிதம்பரம் தீட்சிதர்கள் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக கடலூர் அனைத்து மகளிர் போலீசில் கடலூர் மாவட்ட பெண்கள் ஊரக அலுவலர் தவமணி புகார் கொடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் சிறுமிக்கு திருமணம் செய்துவைத்ததில் தொடர்புடைய பலரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சிறுமியின் தந்தையும், சிறுமியை திருமணம் செய்தவரின் தந்தையும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவில், சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமி அம்மன் சிலை முன்பு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் 15 வயது சிறுமியான என் மகளுக்கு திருமணம் நடந்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.

புகாரில் கூறப்பட்டுள்ளதுபோல் எந்த திருமணமும் நடக்கவில்லை. தீட்சிதர் குல வழக்கப்படி நடராஜருக்கு முன்பு ஒரு போலியான திருமணம் நடத்தப்படும். கடவுளுக்கு இடையே போலியான திருமணம் நடத்தி வைப்பது ஒரு சம்பிரதாயம். கடவுளுக்கு திருமணம் செய்து வைப்பது, தோஷங்கள் கழிப்பதற்காக, கழுதைக்கும், வாழைமரங்களுக்கும் தாலி கட்டி கல்யாணம் செய்வது போன்ற பழக்கங்கள் உள்ளன. இதை எல்லாம் உண்மையான திருமணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

நடராஜர் கோவிலுக்கும் தீட்சிதர்களுக்கும் உள்ள நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்  இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், அந்த சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கு செல்ல மறுக்கிறாள். எனவே, குழந்தை திருணம் குறித்து பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும். அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


Tags : Chidambaram Dikshitar , 15 years old girl, marriage, affair, Chidambaram Dikshidar, Manu
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...