விவசாய பணிக்காக சென்றபோது டிராக்டர் மீது மின்கம்பி விழுந்து 5 பெண்கள் பலி: ஆந்திராவில் சோகம்

திருமலை: ஆந்திராவில் விவசாய பணிக்காக சென்றபோது டிராக்டர் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்காஹொன்னூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் விவசாய வேலைக்காக நேற்று டிராக்டரில் சென்றனர். அப்போது, சாலை மீது இருக்கும் உயர் அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து டிராக்டர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி, பால்தூரு பார்வதி, சங்கரம்மா, வண்ணம்மா, ரத்தினம்மா ஆகிய பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லட்சுமி, மகேஷ், சுங்கம்மா ஆகிய 3 பேரை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், செல்லும் வழிலேயே சுங்கம்மா உயிர் இழந்தார்.  சரோஜம்மா, லட்சுமி ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக  உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்துக்கும் தலா ரூ. 10 லட்சமும்,  காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடும் வழங்க முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: