×

மழை அதிகம் பெய்தாலும் சென்னையில் பாதிப்பு குறைவு 200 மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம் நடத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: அதிக அளவில் மழை பொழிந்தாலும் சென்னையில் பாதிப்பு மிகக் குறைவாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.நகர் சிவன் பார்க்கை சுற்றியுள்ள ராஜமன்னார் சாலை, டபுள் டேங்க் ரோடு, ராமசாமி சாலை பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகளையும், மழை பாதிப்பு எந்த வகையில் உள்ளது என்பதையும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சென்னையில் அதிக அளவில் மழை பெய்தாலும் பாதிப்புகள் குறைவாகவே உள்ளது. ஒரு சில இடங்களில் பாதிப்புகள் உள்ளது. மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, தூர்வாரும் பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றே ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் 6 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு 700 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் இந்தாண்டு 40 இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு 1600 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் 400 மோட்டார்கள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்துள்ளது.

தி.நகர் ஜி.என்.செட்டி மற்றும் சீத்தாம்மாள் காலனி பகுதிகளில் கடந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் தற்பொழுது இல்லை. சென்னையில் உள்ள 16 சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை. வடசென்னை பகுதியில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை மட்டும் தாழ்வான பகுதி என்பதால் மழை நீர் தேங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதிகளிலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 30 செமீ மழை பொழிந்தும் கூட பாதிப்பு இல்லை. மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும் மக்கள் நல்வாழ்வு துறையும் ஒன்றிணைந்து சென்னையில் 200 மருத்துவ சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.


Tags : Raintime Medical Special ,Chennai ,Minister ,Ma. Subharamanyan , Rain, Chennai, less affected, medical camp, Minister M. Subramanian, interview
× RELATED மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...