கோவையில் கார் வெடிப்பு சம்பவம்: திருச்சியில் 2 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை; செல்போனை கைப்பற்றி விசாரணை

திருச்சி: கோவையில் கடந்த சில தினங்களுக்கு  முன் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து,  போலீசார் முக்கிய நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதில் சந்தேக நபர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில்  தமிழக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள வயர்லஸ் ரோடு ஸ்டார் நகரை சேர்ந்தவர் அப்துல் முத்தலீப்(35).

இவரது வீட்டில் இன்று காலை திருச்சி கேகே நகர் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வீடு முழுவதும் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இதில் வீட்டில் இருந்து ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. அந்த செல்போன் மூலம் அப்துல் முத்தலீப் யார் யாருடன் தொடர்பு கொண்டார், செல்போனில் என்ன பதிவாகி உள்ளது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்தவர் சுபைர் அகமது(28). இவரது வீட்டில் இன்று காலை கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இவர்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

Related Stories: