×

அதிக அளவில் மழை பொழிந்தாலும் சென்னையில் பாதிப்பு மிகக் குறைவாக உள்ளது; 200 மருத்துவ சிறப்பு முகாம் நடத்த திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: அதிக அளவில் மழை பொழிந்தாலும் சென்னையில் பாதிப்பு மிகக் குறைவாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகர் சிவன் பார்க்கை சுற்றியுள்ள ராஜமன்னார் சாலை, டபுள் டேங்க் ரோடு, ராமசாமி சாலை பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகளையும், மழை பாதிப்பு எந்த வகையில் உள்ளது என்பதையும்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கே.கே.நகர் புறநகர் மருத்துவமனையில் மழைநீர் தேங்கி உள்ளதா என்பதையும் பார்வையிட்டார்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் அதிக அளவில் மழை பெய்தாலும் பாதிப்புகள் குறைவாகவே உள்ளது. ஒரு சில இடங்களில் பாதிப்புகள் உள்ளது. அந்த பகுதிகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் அதிநவீன மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.  மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, தூர்வாரும் பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றே ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் 6 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 220 கிமீ தொலைவுக்கான வடிகால்வாய் பணிகளில் 157 கி.மீக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 700 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் இந்தாண்டு 40 இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது. இந்த 40 இடங்களில் 9 இடங்களில் மட்டுமே மோட்டார் மூலம் நீர் வெளியேற்றும் அளவிற்கு உள்ளது. அதேபோல கடந்த ஆண்டு 1600 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் 400 மோட்டார்கள் மட்டுமே பயன்படுத்தும் அளவிற்கு குறைந்துள்ளது.

 தியாகராய நகர் பகுதிகளில் குறிப்பாக ஜி.என்.செட்டி மற்றும் சீத்தாம்மாள் காலனி பகுதிகளில் கடந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் தற்பொழுது இல்லை. மேலும் 1300 கிமீக்கும் மேல் மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள 16 சுரங்க பாதைகளும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த பருவமழையின் போது 16 சுரங்கப்பாதைகளும் மழை நீர் தேங்கி போக்குவரத்து தடைப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்த நிலை இல்லை. அப்படி தேங்கும் நீரையும் அதிநவீன மோட்டார்கள் மூலம் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

வடசென்னை பகுதியில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை மட்டும் தாழ்வான பகுதி என்பதால் மழை நீர் தேங்கியுள்ளது. அதனை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. ரங்கராஜன் சாலையில் உள்ள ஒரு சிறிய சுரங்கப்பாதை மட்டும் சிறிய அளவில் பாதிப்பு உள்ளது. அதுவும் சரி செய்யப்பட்டு வருகிறது. சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதிகளிலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 30 செமீ மழை பொழிந்தும் கூட பாதிப்பு இல்லை. ஓரிரு இடங்களில் மழை பொழிந்து கொண்டிருக்கும் போதே இருக்கும் நீர் கால்வாய்களில் வெளியேற்றப்படுகிறது... பெரிய அளவு பாதிப்பு சென்னையில் இல்லை.

பி.டி.ராஜன் சாலை தூர்வாரப்பட வேண்டிய சாலை.  இரண்டு மூன்று இன்ச் தண்ணீர் உள்ளது. அதனை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும் மக்கள் நல்வாழ்வு துறையும் ஒன்றிணைந்து சென்னையில் 200 மருத்துவ சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்

Tags : Chennai ,Minister ,Ma. Subharamanyan , Heavy rains, very little damage in Chennai, special medical camp, Minister M. Subramanian interview
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...