யானைகள் வனத்தில் இருந்து வெளியேறுவதை தடுக்க புதிய கருவி: ஈரோடு பேராசிரியர்கள் குழு சோதனை

கோவை: யானைகள் வனத்தில் இருந்து வெளியேறுவதை தடுக்க தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் ஈரோடு பேராசிரியர்கள் குழு நவீன கருவி பொருத்தி சோதனை செய்தனர். கோவை வனக்கோட்டம் கோவை, போளூவாம்பட்டி, மதுக்கரை உள்பட 7 வனச்சரகமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வனத்தில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இவை, உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து பயிர்களையும், குடியிப்புகளை சேதம் செய்து வருகிறது.

இந்நிலையில், யானைகள் வனத்தில் இருந்து வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் அங்குள்ள தோட்டத்தில் புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தின. இந்த யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் வந்து சேதங்களை ஏற்படுத்தின.

வனத்தில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறி தோட்டத்திற்குள் நுழையும் யானைகள் விடிய விடிய பயிர்களை நாசம் செய்து வந்தன. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். யானைகள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஈரோட்டை சேர்ந்த தனியார் கல்லூரியின் பேராசிரியர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று கோவை குப்பேபாளையம் வந்தனர். அவர்கள், குப்பேபாளையம் பகுதியில் யானைகள் சேதப்படுத்திய தோட்டத்தை வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டனர்.

பின்னர், வனத்துறையினர் வழிகாட்டுதலின் பேரில் யானைகள் வனத்தில் இருந்து அடிக்கடி வெளியேறும் எல்லை பகுதியை கண்டறிந்தனர். அங்கு, நவீன கருவிகளை மரத்தின் மேல் பொருத்தியுள்ளனர். இந்த கருவி சோலார் மூலம் இயங்கக்கூடியது. இந்த கருவி மாலையில் தானாக ஆக்டிவ் ஆகும். அப்போது, அதில் இருந்து பூச்சிகளின் சத்தம் போன்று ஒருவிதமான சத்தம் வரும். இதனால், யானைகள் சத்தம் கேட்கும் இடத்தின் பகுதிக்கு வராது. சுமார், 20 மீட்டர் வரை இந்த சத்தம் கேட்கும். எனவே, யானைகள் ஊருக்குள் நுழைவது தடுக்கப்படும் என பேராசிரியர்கள் குழுவினர் வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் கூறுகையில்: ‘‘குப்பேபாளையம் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. யானைகள் வெளியேறுவதால் யானை-மனித மோதல் சம்பவம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பயிர் சேதமும் இருக்கிறது. எனவே, யானைகள் வனத்தில் இருந்து வெளியேறுவதை தடுக்க தனியார் கல்லூரி பேராசிரியர்கள் புதிய கருவியை சோதனை அடிப்படையில் குப்பேபாளையம் பகுதியில் பொருத்தியுள்ளனர். இந்த கருவியின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும். இதனால், யானைகள் வெளியேற வாய்ப்பு இல்லை என தெரியவந்தால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: