×

மூணாறு அருகே வட்டவடை வனப்பகுதியில் வனத்துறை அனுமதியுடன் சாலை அமைத்த பழங்குடியினர்

மூணாறு: கேரளா மாநிலம் மூணாறில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வட்டவடை கிராமம். கேரளா-தமிழக எல்லை பகுதியான வட்டவடையில் வசிப்பவர்களின் பெரும்பாலும் தமிழர்கள். மலைகளால் சூழப்பட்ட வனப்பகுதிக்கு இடையில் இவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு மறையூர் காந்தளூர் பகுதிக்கு வரவேண்டும். மேலும் வட்டவடையிலிருந்து காந்தளூர் செல்ல வனப்பகுதி வழியாக 13 கி.மீ நடந்து சென்று வந்தனர்.

வாகனத்தில் செல்ல வேண்டுமானால் மூணாறு வழியாக 100 கி.மீ சுற்றி செல்ல வேண்டும். பல வருடங்களாக வட்டவடையிலிருந்து வனப்பகுதி வழியாக காந்தளூர் செல்லும் நடைபாதை வழியை வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் வனப்பகுதி என்பதால் வனத்துறை இதற்கு தடையாக நின்றது.  இந்நிலையில், தற்போது வனப்பகுதி வழியாக மண் சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்கியது.

இதனால் வட்டவடை ஊராட்சியை சேர்ந்த பழங்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வட்டவடை ஊராட்சியில் இருந்து காந்தளூருக்கு மண் சாலையை பழங்குடி மக்கள் அமைத்துள்ளனர். தற்போது அமைக்கப்பட்ட மண் சாலையால் இப்பகுதி பழங்குடியின மக்கள் ஜீப்பில் அரைமணி நேரத்தில் மறையூர்-காந்தளூர் சாலையை அடைந்துவிடலாம். இதுகுறித்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில், இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை அமைக்க, மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வட்டவடை-காந்தளூர் சாலை விரைவில் போக்குவரத்திற்கு நல்ல சாலையாக மாற்றபடும் என்றார்.

Tags : Forest Department ,Rhiravava Forest ,Moonaru , Munnar, Vatavada forest area, forest department permission,Tribes who built the road
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...