கூகுள்பே மூலம் கஞ்சா விற்ற வியாபாரி குண்டாசில் கைது

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல்படி அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அப்போது ரசாக் கார்டன் பகுதியை சேர்ந்த மோகன்(22), சூர்யா(24), ரூபன் (20), சதீஷ்குமார்(23), ஜான்(22) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கூகுள்பே மூலம் பணம் பெற்று பைக்கில் கொண்டு சென்று வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, 2 பைக்குகள் பறிமுதல் செய்து பின்னர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பிரபல கஞ்சா வியாபாரி மோகன் என்பவர் அமைந்தகரை பகுதியில் தொடர்ந்து கூகுள் பே மூலம் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் இதுசம்பந்தமாக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டபோதும் சிறையில் இருந்து  வெளியே வந்ததும் கஞ்சா விற்பனை செய்துவந்தார். இதையடுத்து மோகனை குண்டர் சட்டத்தில் அடைக்கவேண்டும் என்று அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார், சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜூவாலுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கமிஷனரின் உத்தரவின்படி, குண்டர் சட்டத்தில் மோகன் கைது செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

Related Stories: