×

குமரி லாட்ஜில் பணம் இரட்டிப்பு தருவதாக இளம்பெண்கள் மூலம் ஆசையாக பேச வைத்து லட்சக்கணக்கில் வசூல்: நள்ளிரவில் 3 பேர் சுற்றி வளைப்பு; ரூ.11 லட்சம், 3 கார்கள் பறிமுதல்

கன்னியாகுமரி: பணம் இரட்டிப்பு தருவதாக கூறி, கன்னியாகுமரி லாட்ஜில் இளம்பெண்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். இது தொடர்பாக ரூ.11 லட்சம், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி அருகே உள்ள லாட்ஜில், கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் இருந்து ஒரு கும்பல் அறை எடுத்து தங்கினர். 10 அறைகள் வரை புக்கிங் செய்தவர்கள், தனி அலுவலகம் போல் அறைகளை மாற்றினர். இந்த கும்பலில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.

கடந்த 3 நாட்களாக இந்த லாட்ஜிக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல தொழிலதிபர்கள், விஐபிக்கள் கார்களில் வந்தனர். அவர்களை இளம்பெண்கள் உபசரித்து தனித்தனி அறைகளுக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் பல லட்ச ரூபாய் கைமாறும் சம்பவங்களும் அரங்கேறின. இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே கன்னியாகுமரி போலீசுக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வரவேற்பறையில் போலீஸ் விசாரித்து கொண்டிருக்கும் போதே, அறைகளில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

சிலர், மாடிக்கு சென்று தங்களது பைகளை புதரில் வீசிவிட்டு தப்பினர். சிலர் புதருக்குள் மறைந்தனர். இருட்டான பகுதி என்பதால் டார்ச் லைட் மூலம் சுற்றி வளைத்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். மேலும் 2 பைகளை பறிமுதல் செய்தனர். ஒரு பையில் ரூ.11 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது. மற்றொரு பையில் கருவிழி மற்றும் கைரேகைகள் பதிவு செய்யக்கூடிய உபகரணங்கள் மற்றும் சில ஆவணங்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றி பிடிபட்டவர்களை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். மேலும் 3 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பிடிபட்ட கும்பல், மதுரையை சேர்ந்தவர்கள். இவர்கள் இளம்பெண்களை வைத்து மாவட்டம் வாரியாக பிரபல லாட்ஜிகளில் அறைகள் எடுத்து தனியார் நிறுவனம் பெயரில் பணம் வசூலித்துள்ளனர். ரூ.1 லட்சம் கட்டினால், 3 மாதங்களில் ரூ.10 லட்சமாக தருவோம் என்றும், 1 வருடத்தில் ரூ.1 கோடி வரை தருவோம் என்றும் கூறியுள்ளனர். இதற்காக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இளம்பெண்களை பணி அமர்த்தி பேச வைத்துள்ளனர்.

குறிப்பாக வட மாநில இளம்பெண்களை வைத்து கவர்ந்துள்ளனர். தனித்தனி ஏஜெண்டுகளையும் நியமித்துள்ளனர். அதிக முதலீடுகள் செய்யும் வாடிக்கையாளர்களை கொண்டு வரக்கூடிய ஏஜெண்டுகளுக்கு, சொகுசு கார்களையும் பரிசாக வழங்கியுள்ளனர். அந்த வகையில் தங்களது நிறுவனம், கன்னியாகுமரியில் தொடங்கி இருப்பதாக கூறி கடந்த ஒரு வாரமாக ஆன்லைன், செல்போன் மூலம் விளம்பரங்கள் செய்துள்ளனர்.

பின்னர் இவர்களின் ஏஜெண்டுகள் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்துள்ளனர். லாட்ஜிக்கு வருபவர்களுக்கு தனித்தனி அறை ஒதுக்கி, அவர்களுடன் இளம்பெண்களை பேச வைத்து, மனம் கவரும் வகையில் நடந்து கொள்ள வைத்து பணத்தை கறந்துள்ளனர். காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வசூலாகும் பணத்தை மதுரைக்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த 3 நாட்களாக லட்சக்கணக்கில் இவர்கள் வசூலித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரித்தால்தான் பின்னணி பற்றி முழுமையாக கூற முடியும் என போலீசார் கூறி உள்ளனர்.

இந்த லாட்ஜிக்கு யார், யார் வந்து சென்றார்கள் என்பதை கண்டறிய, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Kumari Lodge , Scam to double money, by young women Collection in lakhs, Rs.11 lakh, 3 cars impounded
× RELATED குமரி லாட்ஜில் பணம் இரட்டிப்பு...