×

மணலியில் கோயிலை உடைத்து 2 ஐம்பொன் சிலைகள் கொள்ளை

திருவொற்றியூர்: மணலியில் இன்று அதிகாலை பூட்டியிருந்த பழமையான வேணுகோபாலசாமி பெருமாள் கோயிலை உடைத்து, அங்கிருந்த 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில் உள்ள சிபிசிஎல் நகரில் சுமார் 300 ஆண்டு கால பழமையான ஸ்ரீதேவி, பூதேவி வேணுகோபாலசாமி கோயில் உள்ளது.

இக்கோயிலில் 2 அடி உயரத்தில் வேணுகோபால்சாமி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரின் ஐம்பொன் சிலைகளை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். இக்கோயிலை வைக்காடு கிராம நிர்வாகிகள் பராமரித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் கோயிலை திறக்க அர்ச்சகர்கள் வந்தனர். அப்போது கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகினர்.

இதுகுறித்து வைக்காடு கிராம நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கோயிலுக்குள் சென்று பார்த்தனர். அங்கு கருவறையில் இருந்த ஐம்பொன்னால் ஆன ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை இன்று அதிகாலை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் மணலி இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கோயிலுக்குள் சென்று சோதனை செய்து விசாரித்தனர்.

அங்கு மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மணலி போலீசில் கிராமத் தலைவர் வெங்கடேசன் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் ஐம்பொன் சிலைகள் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Tags : Manali ,Aimbon , Manali, Temple, Aimbon idols, Kolai
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்