×

தமிழகத்தில் 47 இடங்களில் உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்: ஐகோர்ட் அறிவிப்பு

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத 47 இடங்களில் உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த அக்டோபர் 2-ம் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 6-ம் தேதி ஊர்வலத்தை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் அவ்வாறு அனுமதி வழங்கப்படவில்லை என்று காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மற்ற இடங்களில் உளவுத்துறை அறிக்கையை காரணம் காட்டி அனுமதி வழங்க மறுத்து நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நாளில் இருந்த சூழல் வேறு, தற்ப்போது உள்ள வேறு. தற்போதைய சூழலை கருத்து கொண்டு 3 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அதற்க்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும், மீதம் உள்ள 24 இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அந்த பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதனால் தற்போது அனுமதி வழங்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் உள்ளரங்கு கூட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு 47 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி வழங்கலாமா வேண்டாமா  என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.


Tags : Tamil Nadu ,RSS , Intelligence Report, RSS March, high court announcement
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...