×

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறப்பு...!

சென்னை: தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. இந்நிலையில், இன்று காலை முதல் ஆங்காங்கே கனமழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 24 அடியில், தற்போது 20.65 அடியாக நீர் இருப்பு உள்ளது.

இதேபோல் புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கனஅடியில், தற்போது 2692 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, முதல் கட்டமாக மாலை 100 கனஅடி உபரிநீரை வெளியேற்றும்படி மாவட்ட கலெக்டர்கள் ஆர்த்தி, ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர். அதன் அடிப்படையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தலா 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், உபரிநீர் வரத்து அதிகரிப்புக்கு ஏற்ப வெளியேற்றப்படும் நீரின் அளவை அதிகரித்து கொள்ளலாம் என பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டிய நகர்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் அமைந்துள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்கிக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் உயர்ந்து வரும் நீர்மட்ட அளவை பொதுப்பணி மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Tags : Sembarambakkam ,Puzhal , Incessant rains increase water flow: 100 cubic feet per second water release from Sembarambakkam, Puzhal lakes...!
× RELATED பூந்தமல்லி அருகே பள்ளி வேனில்...