திருத்தணி நகராட்சியில் முதன்முறையாக கிராமசபை கூட்டம்: சந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக எஸ் சந்திரன் எம்எல்ஏ, நகராட்சி ஆணையர் ராமஜெயம், நகரமன்ற துணைத் தலைவர் சாமிராஜ், நகராட்சி பொறியாளர் கோபு, நகராட்சி மேலாளர் நாகரத்தினம், நகர அமைப்பு வடிவமைப்பு ஆய்வாளர் தயாநிதி பங்கேற்றனர். கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள் பதிவு செய்து கொண்டனர்.

4வது வார்டில் நடந்த பகுதி சபா  கூட்டத்துக்கு கவுன்சிலர் சியாம் சுந்தர் தலைமை தாங்கினார். சந்திரன் எம்எல்ஏ பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ‘’சென்னை பழைய பைபாஸ் சாலை, தைலம் மரம் உள்ள பகுதியில் அனைத்து பேருந்துகளும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க வேண்டும். இந்த பகுதியில் தனியாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டும். கழிவுநீர் கால்வாய் தூர்வார வேண்டும்’’ என்று மக்கள் வலியுறுத்தினர். ‘’ உங்கள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எம்எல்ஏ உறுதியளித்தார்.

8வது வார்டு கூட்டம் கவுன்சிலர் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது. 7வது வார்டில் கவுன்சிலர் பிரசாத் தலைமை தாங்கி நடத்தினார். வார்டு, 12ல் நடந்த சபா கூட்டத்திற்கு கவுன்சிலர் அப்துல்லா தலைமை தாங்கினார்.  5வது வார்டில் நடந்த பகுதி சபா கூட்டத்திற்கு கவுன்சிலர் குமுதா கணேசன் தலைமை வகித்தார். 16வது வார்டு சபா கூட்டம் கவுன்சிலர் சண்முகவள்ளி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், ‘’லட்சுமணன் தெரு எம் கே.சுப்பிரமணியன் தெரு, வாசுதேவன் தெருக்களில் கழிவுநீர் கால்வாய்  குறுகியதாக உள்ளதால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு சாலையின் மேற்பரப்புக்கு வருகிறது.

எனவே அகலமாக கால்வாயில் தண்ணீர் வெளியேறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வார்டு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவேண்டும்’ என்று வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் திருத்தணி நகர செயலாளர் வினோத்குமார், மாவட்ட பொருளாளர் மிதுன் சக்கரவர்த்தி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் கிரண், முன்னாள் நகரமன்ற துணை தலைவர் டி.ரகுநாதன், பிரவீன்குமார், இலக்கிய அணி செயலாளர் பிரான்சிஸ் பத்மநாபன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் முகமது அலி, ஊழியர்கள் ஜெகநாதன், ராஜேஷ் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: