×

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம, வார்டு சபை கூட்டம் பொதுமக்கள் வரிகளை செலுத்தி வளர்ச்சிக்கு உதவ வேண்டும்-கலெக்டர் வலியுறுத்தல்

திருவண்ணாமலை : பொதுமக்கள் வரிகளை செலுத்தி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என திருவண்ணாமலை நகராட்சியில் நடந்த வார்டு சபை கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 860 கிராம ஊராட்சிகள், நான்கு நகராட்சிகளில் மற்றும் 10 பேரூராட்சிகளில் நேற்று கிராம சபை, வார்டு சபை கூட்டம் நடந்தது.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், தமிழகத்தில் முதன்முறையாக கிராம சபை கூட்டங்களை போல, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் வார்டு சபை கூட்டங்களை நடத்தி, மக்கள் பிரச்னைகளை, கோரிக்கைகளை கேட்டு தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. அதில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கவுரவிக்கப்பட்டனர்.மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி, சொத்துவரி செலுத்துதல் போன்றவை குறித்து பொதுமக்களிடம் விளக்கப்பட்டது.

 இந்நிலையில், திருவண்ணாமலை நகராட்சி 1வது வார்டு பகுதியில் நேற்று வார்டு சபை கூட்டம் நடந்தது. நகராட்சித் தலைவர் நிர்மலாவேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சு.ராஜாங்கம், நகராட்சி ஆணையர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் கோவிந்தன் வரவேற்றார்.கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் பா.முருகேஷ், எம்பி சி.என்.அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:

தமிழகத்தில் முதன்முறையாக நகராட்சிகளில் வார்டு சபை கூட்டம் முதல்வரின் உத்தரவுபடி நடக்கிறது. நகராட்சி பகுதியில் 11 சதவீதம்தான் வரி வசூல் செய்திருக்கிறோம். 7 சதவீதம் தான் குடிநீர் வரி வசூலித்திருக்கிறோம். அரசின் நிதியை மட்டுமே நம்பி நகராட்சி இருக்கக்கூடாது. கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம், நமக்கு நாமே திட்டம் போன்றவற்றில் ஒதுக்கப்படும் நிதி மூலம் குறிப்பிட்ட சில பணிகளை மட்டுமே செய்ய முடியும்.

கோடிக்கணக்கான ரூபாய் வரி நிலுவை உள்ளது. இந்த நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. எனவே, சாலை, தெரு விளக்கு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அனைத்து வார்டுகளிலும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் வணிக வளாகம் கட்டுவதற்கு, முதற்கட்ட ஆய்வு முடிந்திருக்கிறது. ஏற்கனவே, அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். அதுபோன்ற பெரிய திட்டங்களுக்கு அரசு நிதி அளிக்கும். ஆனால், நம்முடைய பகுதிகளுக்கு தேவையான பணிகளை நிறைவேற்றிட, சொத்துவரி போன்றவற்றை ஓரிரு மாதங்களுக்குள் செலுத்தி ஒத்துழைக்க வேண்டும். நம்முடைய கடமையையும் செய்தால்தான், நகரம் வளரும்.

வரி நிலுவைகளை மக்களிடம் தெரிவித்து அவற்றை விரைந்து வசூலிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வதும், வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களை கேட்பதும்தான் இக்கூட்டத்தின் நோக்கமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ப.கார்த்திவேல்மாறன், ஆர்டிஓ மந்தாகினி மற்றும் பிரியா விஜயரங்கன், காலேஜ் ரவி, கவுன்சிலர் மண்டி பிரகாஷ், ஷெரீப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த செட்டி பட்டு திரவுபதி அம்மன் கோயில் எதிரே உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். ஊராட்சி செயலாளர் சுரேஷ் பஞ்சாயத்து கணக்குகளை வாசித்தார். சிறப்பு விருந்தினராக கலெக்டர்.பா. முருகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

செய்யாறு: செய்யாறு ஒன்றியம் செங்கட்டான்குண்டில் மற்றும் வெம்பாக்கம் ஒன்றியம் திருப்பனங்காடு ஆகிய இரு கிராமங்களில் உள்ளாட்சிகள் தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எம்எல்ஏ ஒ. ஜோதி முன்னிலையில் கிராம வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு அடிப்படை திட்ட பணிகள் நிறைவேற்றுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், செய்யாறு 21வது வார்டு அம்பேத்கர் நகர் தொடக்கப்பள்ளியில் பகுதி சபா கூட்டம் நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி பேசுகையில், நீங்கள் வைத்த கோரிக்கையின் பேரில் வருகிற நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் சிறு பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, நகராட்சி பள்ளிக்கு தேவையான சுகாதார கழிப்பிட வசதி உள்ளிட்டவைகள் விரைவில் நிறைவேற்றி தரப்படும்’ என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகராட்சி கவுன்சிலர்கள் ,  ஒன்றிய கவுன்சிலர் ஏ.ஞானவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் ஊராட்சி கிராம சபா கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி தலைவர் தேசிங்கு தலைமை தாங்கினார்.
போளூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்திபெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொரோனா காலத்தில் மட்டுமல்லாமல் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருவதை பாராட்டி ஊராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தார்.

போளூர் பிடிஓக்கள் பாபு, பரணிதரன் ஆகியோர் சந்தவாசல் ஊராட்சி அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மக்களின் அடிப்படை வசதிகளை சிறப்பாக பராமரிப்பதிலும் மாவட்டத்தில் முன்மாதிரி ஊராட்சியாக இருப்பதாக கூறி பாராட்டு தெரிவித்தனர்.கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் முதல்நிலை பேரூராட்சியில் உள்ளாட்சிகள் தின விழாவை முன்னிட்டு வார்டு (பகுதி) சபா கூட்டம் பேரூராட்சி தலைவர் கோ.சரவணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எம்எல்ஏ கலந்து கொண்டார். இதில், வார்டுகள் கட்டமைப்பு, கழிவுநீர் கால்வாய்கள், குடிநீர், வரவு செலவு, குப்பை சேகரித்தால் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், திமுக நகர செயலாளர் சி.கே.அன்பு உட்பட பலர் உடனிருந்தனர்.

ஆரணி:  ஆரணி நகராட்சியில் உள்ள 1, 5, 30 ஆகிய வார்டுகளில் நகர சபை கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்சிசெல்வி தலைமை தாங்கினார்.
இதில், வார்டு 1 விஏகே நகர் பகுதியில் ₹50 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்க அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். 30வது வார்டில் உள்ள பள்ளி அருகில் நிழற்கூடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து,  நகரமன்ற தலைவர் ஏ.சி மணி பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். களம்பூர் பேரூராட்சியில் நடந்த நகர சபை கூட்டத்திற்கு செயல் அலுவலர் லோகநாதன் தலைமை  தாங்கினார். பேரூராட்சி தலைவர் கேடிஆர் பழனி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுதா முருகன் தலைமை தாங்கினார்.செயல் அலுவலர் ஆனந்தன் முன்னில வகித்தார். இதில் ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்திட புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்கள் மூலம் தெரு விளக்கு, குடிநீர்,கால்வாய் பிரச்சனை உள்ளிட்டவற்றை மன்ற உறுப்பினர் மூலம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைவருக்கு தகவல் தெரிவித்து உடனே அணியாக தீர்த்துக் கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Tiruvannamalai , Thiruvannamalai: The collector asked the public to help development by paying taxes in the ward council meeting held in Tiruvannamalai municipality.
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...