திருப்பதியில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக உணவு, தங்குமிடத்தை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும்-அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

திருப்பதி : திருப்பதியில் கனமழை காரணமாக உணவு, தங்குமிடத்தை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் வெங்கடரமணா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் வெங்கடரமணா, எஸ்பி பரமேஸ்வர், இணை கலெக்டர் பாலாஜி ஆகியோர் மாவட்ட  மண்டல அளவிலான அதிகாரிகளுடன்  வீடியோ கான்பரன்ஸ் மூலம் மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது, கலெக்டர் வெங்கடரமணா பேசியதாவது:  தற்போது மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை அறிவித்திருந்தது. ஆகையால், அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கடந்தாண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்களை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

வருவாய் அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட மண்டல அலுவலர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு அவ்வப்போது அறிவுரைகளை வழங்க வேண்டும். தாசில்தார்கள் கூட்டாக சென்று பார்வையிட வேண்டும். மழையால் ஆபத்தான நிலையில் உள்ள பாலங்கள் மற்றும் தரைப்பாலங்களை கண்டறிய வேண்டும். நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து ராஜ், எம்பிடிஓ அனைத்து இடங்களிலும் அதிக முன்னுரிமை கொடுத்து வாய்க்கால்களை சுத்தம் செய்து, தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். மின்தடையின்றி மின் துறையினர் அவ்வப்போது பழுது பார்க்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராம மருத்துவமனைகளில் முழு அளவிலான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யது அவசியம். மீனவர்களுக்கு கடலோர மண்டலங்கள் வழக்கமான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். உள்நாட்டில் நிலைமையை மதிப்பீடு செய்து முகாம்கள், உணவு, தங்குமிடம் மற்றும் சுகாதார முகாம்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். முக்கியமாக, நேற்றிரவு முதல் பெய்து வரும் மழையால் அதிகளவில் ஆபத்தில் உள்ள பள்ளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்துகள், கால்நடைகள் உயிரிழப்பதை தடுக்க காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.இதில், மாவட்ட வருவாய் அதிகாரி சீனிவாசராவ், ஆர்டிஓ அந்தந்த மண்டலத்தை சேர்ந்த தாசில்தார், எம்பிடிஓக்கள் பங்கேற்றனர்.

ஆபத்து பகுதிகளை கண்டறிய வேண்டும்

தொடர்ந்து, எஸ்பி பரமேஸ்வர் பேசுகையில், ‘வானிலை முன்னறிவிப்புடன் ஆபத்து பகுதிகளை கண்டறிந்து தீயணைப்பு மற்றும் என்டிஆர்எப் குழுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  தரைப்பாலங்கள் மற்றும் பாலங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். பயணிகளை திசை திருப்பவும் வருவாய்த்துறையினருடன் ஒரு போலீஸ்சாரை ஏற்பாடு செய்யப்படுவார்கள்’ என்றார்.

ரேஷன் கடையில் அரிசி இருப்பு வைக்க வேண்டும்

இணை கலெக்டர் பாலாஜி பேசுகையில், ‘மழை காலங்களில் செல்போன் டவர் நிறுவனங்களிடம் பேசி டவர்களில் உள்ள ஜெனரேட்டர்களில் முழு அளவில் டீசல் நிரப்ப உத்தரவு பிறப்பித்து வருகிறோம். ரேஷன் கடைகளில் தேவையான அரிசி இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: