அந்தமானில் மோசமான வானிலை: 14 விமானங்கள் ரத்து

மீனம்பாக்கம்: அந்தமானில் மோசமான வானிலை மற்றும் விமானநிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 4ம் தேதிவரை 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை விமானநிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 7 விமானங்கள் அந்தமானுக்கு புறப்பட்டு செல்கின்றன. அதேபோல் அந்தமானில் இருந்து 7 விமானங்கள் சென்னைக்கு இயக்கப்படுவது வழக்கம்.

அந்தமான் சுற்றுலா தலமாக விளங்குவதால், இந்த விமானங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். மேலும், அந்தமானில் ஏராளமான தமிழர்கள் வசிப்பதால், இந்த விமானங்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கம். எனினும், அந்தமான் கடற்பகுதியில் மாலை 3 மணியில் இருந்து தரைக்காற்று வீசுவதால், அங்கு விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதமாகும் நிலை ஏற்பட்டது.

இதனால் அந்தமான் விமானநிலையத்தில் அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் நடைபெற்று வருகிறது. மாலை, இரவு நேரங்களில் விமான சேவைகள் இல்லை. கடந்த சில நாட்களாக, வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, நேற்று முதல் அந்தமானில் மோசமான வானிலை நிலவுகிறது. மேலும், அந்தமான் விமானநிலையத்தில் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று காலை முதல் வரும் 4ம் தேதிவரை சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு செல்லும் 7 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல், அந்தமானில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு இயக்கப்படும் 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மீண்டும் 5ம் தேதி முதல் அந்தமானுக்கு விமானசேவைகள் துவங்கும். அந்தமானுக்கு மேற்கண்ட தேதிகளில் செல்வதற்கு ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், அவர்களின் டிக்கெட்டுகளை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளலாம். அல்லது, டிக்கெட்டுக்கான முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: