×

பறவை காய்ச்சல் எதிரொலி பொள்ளாச்சி சந்தையில் ஒரேநாளில் ரூ.2.10 கோடிக்கு மாடுகள் விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தைக்கு நேற்று மாடுகள் வரத்து அதிகமாக இருந்ததுடன், பறவை காய்ச்சல் எதிரொலியால் கேரள வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர். இதனால், நேற்று ஒரே நாளில் ரூ.2.10கோடி வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து மாடுகள் வரத்து இருக்கும். இதில் கடந்த புரட்டாசி மாதத்தில் மாடுகள் வரத்து குறைவாக இருந்ததுடன், விற்பனை மந்தமானது. பின் கடந்த 2 வாரத்துக்கு முன்பு நடைபெற்ற சந்தைநாளின்போது, மாடுகள் வரத்து அதிகமாக இருந்ததுடன் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வருகையால் மாடு விற்பனை விறுவிறுப்பாகி கூடுதல் விலைக்குபோனது.

அதன்பின் கடந்த வாரத்தில் நடந்த சந்தை நாளின்போது, சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாக இருந்தாலும், கேரள வியாபாரிகள் வருகை குறைவால் அந்நேரத்தில் விற்பனை மந்தமானது. இதனால் கடந்த வாரத்தில் ரூ.1.60 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த சந்தை நாளின்போது, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

அதிலும் 800க்கும் மேற்பட்ட மாடுகள் ஆந்திர மாநிலத்திலிருந்தே கொண்டு வரப்பட்டன.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் வரத்து ஓரளவு இருந்ததுடன், கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியால் மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர். இதனால் அனைத்து வகை மாடுகளும் கூடுதல் விலைக்கு விற்பனையானது.    

 இதில், பசுமாடு ரூ.32 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரையிலும், காளை மாடு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும், கன்றுகுட்டி ரூ.18 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாக மாடுகள் விற்பனை விறுவிறுப்பால் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.2.10 கோடிக்கு வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi , Pollachi: There was a large influx of cows to the Pollachi market yesterday and many Kerala traders due to the echo of bird flu.
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு