×

வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட டேன் டீ தோட்டங்களில் தேயிலைச் செடி அகற்றும் பணிகள் துவக்கம்

கூடலூர் : தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட நிறுவனமான டேன் டீக்கு சொந்தமான பராமரிக்க முடியாத சுமார் 650 ஏக்கர் தேயிலை தோட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சுமார் 5300 ஏக்கர் தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்து உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட தேயிலை தோட்டங்களில் இருந்து தேயிலை செடிகளை அகற்றி வனப்பரப்பை உருவாக்கும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.  பாண்டியார் தேயிலைத் கோட்டத்தில் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட தேயிலை தோட்டங்களில்  செடிகளை இயந்திரங்கள் மூலமாக அகற்றும் ஆய்வுப் பணிகளை முதற்கட்டமாக துவக்கி உள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் வால்பாறை உள்ளிட்ட இடங்களில் கடந்த 1969 ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக இந்த தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

வனத்துறையிடமிருந்து ஐம்பது ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இந்த  தோட்டங்கள் உருவாக்கப்பட்டதாகவும், லாபகரமாக இயங்கி வந்த நிறுவனம் கடந்த சில வருட காலமாக நட்டத்தில் இயங்கி வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், வனப்பகுதிகளை ஒட்டிய பராமரிக்க முடியாத தேயிலைத் தோட்டங்களை வனத்துறையிடம் மீண்டும் ஒப்படைக்கும் முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசின் இந்த நடவடிக்கைளுக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் பற்றாக்குறை என்று கூறும் நிறுவனம் 2000-க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த மறுத்து வருகிறது.

போதிய தொழிலாளர்களை நியமித்து, நிர்வாகத்தை சீரமைத்து, தேவையற்ற ஆடம்பர செலவினங்களை குறைத்து, உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிர்வாகத்தில் உள்ள ஊழல்களை களைந்து, தேயிலைத் தோட்டங்களை லாபகரமாக நிர்வகிக்க முடியும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Forest Department , Kudalur: About 650 acres of unmaintained tea estate owned by Tan Tea, the Tamil Nadu government tea plantation company.
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...