வடகிழக்கு பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம்..!

சென்னை: வடகிழக்கு பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் பருவமழை பாதிப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார். அடுத்த 5 தினங்களுக்கு மழை இருப்பதாக கூறியுள்ளனர்; அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துத்துறை அமைச்சர்களும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்துகின்றனர். பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு பணியினரும் தயார் நிலையில் உள்ளனர். வடசென்னை தாழ்வான பகுதி என்பதால் மழை பாதிப்பு வழங்கமாக உள்ளது போல் உள்ளது. இருப்பினும் நீரை அகற்றும் பணி துரிதமாக நடக்கிறது. போன வருசம் தி.நகர் பகுதியில எவ்வளவு தண்ணீர் தேங்குச்சுனு தெரியும்; இந்த மழைக்கு அங்க தண்ணீர் எதுவும் தேங்கல, எல்லா பகுதிகளிலும் எங்களால் முடிஞ்சவரை பணிகளை செய்துள்ளோம்.

வடகிழக்கு பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. தமிழ்நாடு முழுவதும் அனைத்து அமைச்சர்களும் களத்தில் உள்ளனர். வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் விரைவில் வழங்கப்படும். மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 5,302 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது எந்த முகாம்களிலும் மக்கள் தங்க வைக்கப்படவில்லை. சென்னை மட்டுமல்ல மற்ற மாவட்டங்களிலும் மழையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தொகை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 20.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிலத்தை நீர்வளத்துறை நேரடியாக கண்காணித்து வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மிர்பு படையினர் 1,500 பேர் தயார் நிலையில் உள்ளனர். மிகப்பெரிய பாதிப்பு எந்த மாவட்டத்திலும் இல்லை. நீலகிரி, கொடைக்கானல் போன்றவை முதல்வர் கண்காணிப்பில் இருக்கிறது இவ்வாறு கூறினார்.

Related Stories: