×

மதுரை, தேனியில் புதிதாக கட்டிய உண்டு உறைவிடப் பள்ளிகள், வகுப்பறைகள், ஆய்வக கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.13.64 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.11.2022) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 13 கோடியே 64 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் மூன்று கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள உண்டு உறைவிடப் பள்ளிகள், மதுரை மாவட்டத்தில் 2 கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், நாகப்பட்டினம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 2 கல்லூரி விடுதிக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு முனைப்பான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அம்மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட கல்வி உதவித் தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 2022-2023ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்கிடச் செய்ய, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மூன்று கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் உண்டு உறைவிடப் பள்ளிகள் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மதுரை மாவட்டம், செக்கானூரனி, அரசு கள்ளர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி  மாவட்டம், வெள்ளையம்மாள்புரம், அரசு கள்ளர் (இருபாலர்) மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 1  கோடியே 17 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று உண்டு உறைவிடப் பள்ளிகள்; மதுரை மாவட்டம், அய்யனார் குளம் மற்றும்  கீரிப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளிகளில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 5 கோடியே 66 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், கழிவறைகள் ஆகிய கட்டடங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் 3 கோடியே 13 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம் மற்றும் தருமபுரி மாவட்டம், செட்டிக்கரையில் 3 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்; என மொத்தம் 13 கோடியே 64 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அணில் மேஷ்ராம், இ.ஆ.ப., மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் முனைவர் இரா. நந்தகோபால், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   


Tags : Chief Minister ,M. K. Stalin ,Madurai ,Theni , Chief Minister M. K. Stalin inaugurated newly built boarding schools, classrooms and laboratory buildings in Madurai and Theni..!
× RELATED நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு...