×

பூனைகள் வெளியே வந்து விட்டன, இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது: ஆளுநர் ரவி, அண்ணாமலை குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து

சென்னை: பூனைகள் வெளியே வந்து விட்டன, இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது என ஆளுநர் ஆர்.என். ரவி, மிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;    

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவியை நியமித்த போது, பலரும் வாழ்த்து தெரிவிக்க நான் மட்டுமே கடுமையாக எதிர்த்தேன். எதிர்க்கட்சிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இதுபோன்ற நியமனங்களை ஒன்றிய அரசு செய்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

நேர்மையான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையில், ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருக்கிறார்களோ? என்ற சந்தேகத்தையும் அப்போது எழுப்பியிருந்தேன். ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்த உடனே எதிர்ப்பு தெரிவிப்பதா? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், நான் எழுப்பிய சந்தேகங்களை எல்லாம் இன்றைக்கு ஆளுநர் ரவி உண்மையாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆளுநர் வேலையைத் தவிர மற்ற வேலைகளை அவர் சரியாகச் செய்து கொண்டு, ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கிறார். ஆளுநராகப் பதவியேற்றதுமே, தமிழகத்தில் செயல்படுத்தும் திட்டங்களை ஆய்வு செய்ய ஏதுவாக தகவல்களைத் தொகுத்து வைக்குமாறு தலைமைச் செயலரைக் கேட்டுக் கொண்டார். தமிழக அரசின் திட்டங்கள், துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிக் கண்காணிப்பதற்கோ, தலையிடுவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை. ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரின் நியமனத்தின் அடிப்படையில் பொறுப்புக்கு வந்தவரே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம் அதிக வாக்குகளைப் பெற்று சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு பெற்றவர்தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சருக்கும், அமைச்சரவைக் குழுவிற்கும் தான் உண்டு. ஆளுநருக்கு இல்லை. இந்நிலையில், ஆளுநரின் தலையீடு உள்நோக்கம் கொண்டது, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கண்டனக் குரலை எழுப்பினேன்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி தமிழக மக்களுக்கு ஆளுநர் ரவி துரோகம் செய்தார். நீட் மசோதா மட்டுமின்றி தமிழக அரசின் 18 க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டார்.

அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய ஆளுநர் ரவி, சனாதன தர்மத்தில் ஓளியால் உருவாக்கப்பட்டதே இந்தியா என்று பேசி, ஆர்.எஸ்.எஸ் முகத்தைக் காட்டினார். மதவாத, வருணாசிரம, வன்முறை கருத்துகளை ஆளுநர் பதவியிலிருந்து கொண்டு கூறுவது  அழகல்ல. இதைவிட ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் வேறேதும் இருக்க முடியாது.

சமீபத்தில் கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில், தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு பரிந்துரைத்ததில் தாமதம் ஏன்? என்று, தமிழக பா.ஜ.க. தலைவர் தலைவர் அண்ணாமலையை போல் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஆளுநர் ரவி. அண்ணாமலை தான் சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறார் என்றால், முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரும் அதையே செய்யலாமா? அது ஆளுநர் பதவிக்கு அழகா?  சமீபகாலமாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளான ஆளுநரும் அண்ணாமலையும் தமிழ்ப் பற்று மிக்கவர்கள் போல் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநரின் குரலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் குரலும்   ஒரே மாதிரியாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயல்வது தான் பா.ஜ.கவின் நரித்தனம். வல்லபாய் பட்டேலை பிரதமராக்கி இருந்தால் நாடு சிறப்பாக இருந்திருக்கும் என்கிறார்  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.  முதல் தேர்தல் நடப்பதற்கு முன்பே வல்லபாய் பட்டேல் இறந்துவிட்டார். பிறகு எப்படி வல்லபாய் பட்டேலை பிரதமராக்க முடியும்? இது போன்று வரலாறுகளைத் திரிக்கும் வேலையை அமித்ஷா மட்டுமல்ல, அவரது இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டு வரும் ஆளுநர் ரவியும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் செய்து வருகின்றனர்.

ஒரு புறம் அரசியல் சாசனத்தைத் தகர்த்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ரவி. மறுபுறம் கோமாளித் தனமான அரசியல் செய்து சொந்த கட்சியிலேயே அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. செய்தியாளர்களை தரக்குறைவாகப் பேசுவதும், அதன்பிறகு நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என் சப்பைக்கட்டு கட்டுவதும் அண்ணாமலையின் அரைவேக்காட்டு அரசியலை  வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.  

ஆளுநர் ரவிக்கும் அண்ணாமலைக்கும் தமிழ் மொழி மீது ஏற்பட்டிருக்கும் பாசம் வெறும் வேஷம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.   அரசிலும் அரசியலிலும் செய்யும் ஜனநாயக படுகொலையையும், கோமாளித் தனத்தையும் இனியும் கைக்கட்டி, வாய்மூடி மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலையை நடத்துவதற்கு இருவரையும் ஆயுதமாகப் பயன்படுத்த பா.ஜ.க. முயல்கிறது.  

பூனைகள் வெளியே வந்து விட்டன. இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது. இத்தகைய சக்திகளிடமிருந்து தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்ற  வகுப்புவாத  எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசர  சூழல் உருவாகியிருக்கிறது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Tags : Governor ,Ravi , The cats are out, it's time to ring the bell: KS Azlagiri comments on Governor Ravi, Annamalai
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து